நான்குவழிச்சாலையில் பாலம் அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியலுக்கு முயற்சி

ராயக்கோட்டை அருகே நான்கு வழிச்சாலையில் பாலம் அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியலுக்கு முயன்றனர். அவர்களிடம் அதிகாரிகள் சமரசம் செய்தனர்.

Update: 2022-10-06 19:30 GMT

ராயக்கோட்டை:-

ராயக்கோட்டை அருகே நான்கு வழிச்சாலையில் பாலம் அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியலுக்கு முயன்றனர். அவர்களிடம் அதிகாரிகள் சமரசம் செய்தனர்.

நான்கு வழிச்சாலையில் பாலம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உடையாண்டஅள்ளி பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த வழியாக தர்மபுரி - ஓசூர் நான்கு வழிச்சாலை தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. உடையாண்டஅள்ளி பஸ் நிறுத்தம் அருகில் ஊருக்கு செல்ல பாதை இல்லாததால் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படுகிறது.

இந்த மேம்பாலத்தின் கீழ்ப்பகுதி வழியாகத்தான் உடையாண்டஅள்ளிக்கு வர வேண்டும். இதன் காரணமாக உடையாண்ட அள்ளி கிராம மக்கள் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் தினமும் உயர்மட்ட மேம்பாலம் அருகில் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது.

சாலைமறியலுக்கு முயற்சி

இதன் காரணமாக நேற்று காலை 11 மணி அளவில் உடையாண்டஅள்ளி ஊர் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஏராளமானவர்கள் சாலை மறியலில் ஈடுபட திரண்டனர். தகவல் அறிந்ததும் தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி, ராயக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

மேலும் சம்பவ இடத்திற்கு 4 வழிச்சாலை மேலாளர் ரமேஷ்பாபு, உதவி பொறியாளர் ரகு மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சம்பவ இடம் வந்தனர்.

அதிகாரிகள் சமரசம்

மறியலுக்கு திரண்ட பொதுமக்களிடம் அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அங்கு சிறுபாலம் அமைத்து தருவதாக 4 வழிச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சுமார் 2 மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்