கெங்கைகொண்டான் பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் கெங்கைகொண்டான் பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-03-15 18:45 GMT

மந்தாரக்குப்பம், 

கெங்கைகொண்டான் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் 9 மற்றும் 10-வது வார்டு பகுதி மக்களுக்கு கடந்த சில நாட்களாக சரியான முறையில் குடிநீர் வழங்கவில்லை. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதையடுத்து குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலை 9 மணிக்கு காலிகுடங்களுடன் பேரூராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க வேண்டும் என கோரி கோஷங்களை எழுப்பினர். அந்த நேரத்தில் வழக்கம்போல் பேரூராட்சி ஊழியர்கள் பணிக்கு வந்தனர். ஆனால் அவர்களை பொதுமக்கள் தடுத்து நிறுத்தி, எங்களுக்கு குடிநீர் வழங்கிவிட்டு அலுவலகத்தை திறந்து உள்ளே செல்லுங்கள் என்று கூறினர். இதனால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பேச்சுவார்த்தை

இதனிடையே இது குறித்த தகவலின் பேரில் பேரூராட்சி மன்ற தலைவர் பரிதாஅப்பாஸ் மற்றும் மந்தாரக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர்விழி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் உறுதியளித்தனர். அதனை ஏற்று பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன் பின்னர் ஊழியர்கள் பேரூராட்சி அலுவலகத்தை திறந்து தங்களது பணியை மேற்கொண்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்