"கலைஞர் கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் பணி விதிமுறைப்படி நடைபெறும்" - அமைச்சர் சாமிநாதன்
பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு மத்திய சுற்றுச்சூழல் துறையின் அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.;
சென்னை,
தேசிய பத்திரிக்கையாளர் தினத்தை முன்னிட்டு பத்திரிக்கையாளர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்கும் நிகழ்ச்சி சென்னை திருவல்லிக்கேணியில் இன்று நடைபெற்றது. இதில் தமிழக செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் பங்கேற்று, பத்திரிக்கையாளர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான காப்பீட்டை வழங்கினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சாமிநாதன், தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதிக்கு சென்னை மெரினாவில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் பணி விதிமுறைப்படி நடைபெறும் என்று தெரிவித்தார். விதிமுறையை மீறி தமிழக அரசு எந்த பணியிலும் ஈடுபடாது எனவும் அவர் கூறினார்.
பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு மத்திய சுற்றுச்சூழல் துறையின் அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவித்த அவர், தற்போது மழை உள்ளிட்ட காரணங்களால் பணிகள் தாமதமாவதாகவும், முடிந்த அளவு விரைவாக நினைவுச் சின்னத்தை திறப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.