இடிந்து விழும் நிலையில் உள்ளதால் அரசு பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள்
சோமங்கலம் அருகே இடிந்து விழும் நிலையில் உள்ளதால் அரசு பள்ளியை பெற்றோர்கள் முற்றுகையிட்டனர்.
காஞ்சீபுரம் மாவட்டம் சோமங்கலம் அடுத்த வெங்காடு ஊராட்சிக்குட்பட்ட கருணாகரச்சேரி கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியின் கட்டிடம் தற்போது இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. இது குறித்து அதிகாரியிடம் பெற்றோர் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் நேற்று மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். இதனால் பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது அங்கு வந்த ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலக பொறியாளர் மாரிச்செல்வத்திடம் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் ஆபத்தான நிலையில் உள்ள பள்ளி கட்டிடத்தை உடனடியாக இடித்து அகற்றிவிட்டு புதிய பள்ளி கட்டிடம் கட்டவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து அவர் கூறுகையில், பழைய பள்ளி கட்டடத்தை இடித்து அகற்றி புதிய கட்டிடம் கட்டுவதற்கு குறித்து மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்துள்ளோம். அனுமதி வந்தவுடன் பழைய பள்ளி கட்டிடம் அகற்றப்பட்டு புதிய புதிய கட்டிடம் கட்டப்படும். என தெரிவித்தார்.