பிறந்தநாளை முன்னிட்டு நாளை தொண்டர்களை சந்திக்க உள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்..!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் நாளை தொண்டர்களை சந்திக்க உள்ளார்.
சென்னை,
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
2005ஆம் ஆண்டு கழகம் தொடங்கப்பட்ட பிறகு 2006 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் எனது பிறந்தநாளை "வறுமை ஒழிப்பு தினமாக" கடைப்பிடித்து வருகிறேன். தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிர்வாகிகளும், தொண்டர்களும் என் வழியை பின்பற்றி அவர்களால் முடிந்த அளவிற்கு மக்களுக்கான நல உதவிகளை "இயன்றதைச் செய்வோம், இல்லாதவர்க்கே" என்ற கொள்கை முழக்கத்தோடு தொடர்ந்து, ஒவ்வோரு ஆண்டும் செய்து வருகிறார்கள். இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்கள் பயன்பெற்று, அவர்களின் வறுமையை ஒழிக்கும் முயற்சியில் தே.மு.தி.க. தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. வறுமை ஒழிப்பு என்பது மக்கள் இயக்கமாக மலர வேண்டும் என்பதே எனது குறிக்கோள்.
தமிழக மக்கள் மனதில் நாம் நீங்கா இடம்பிடித்துள்ளோம். என் மீது அன்புகொண்ட தமிழக மக்களுக்கும், என் தாய்மார்களுக்கும், தேமுதிக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் என்றென்றும் நான் கடமைப்பட்டுள்ளேன். அதே நேரத்தில் தமிழக மக்கள் தங்கள் நல்ஆதரவையும், ஒத்துழைப்பையும் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தொடர்ந்து வழங்கிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
குறிப்பு:- என்னுடைய உடல்நலம் குறித்த வந்ததிகளை யாரும் நம்பவேண்டாம். நான் நலமுடன் இருக்கிறேன். கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் எனது பிறந்தநாளில் நாளை (25.08.2023) காலை 10 மணிக்கு கழக நிர்வாகிகளையும், கழக தொண்டர்களையும் நேரில் சந்திக்கவுள்ளேன். என்னை சந்திக்க வரும் கழக தொண்டர்கள் யாரும் பொக்கே, சால்வை, மாலை, போன்ற அன்பளிப்புகளை தவிர்க்க வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.