அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ்

கொடைக்கானல் அருகே அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது.

Update: 2023-03-25 19:37 GMT

கொடைக்கானல் அருகே வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களை பூட்டி 'சீல்' வைக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வில்பட்டி பகுதியில் அனுமதியின்றி கட்டப்பட்ட 54 தங்கும் விடுதிகள் மற்றும் வீடுகளை பூட்டி 'சீல்' வைத்தனர். இதற்கிடையே 'சீல்' வைக்கப்பட்ட 24 கட்டிடங்களின் உரிமையாளர்கள், சென்னை நகர்ப்புற வீட்டுவசதி வாரியத்திடம், கட்டிடங்களை வரன்முறைபடுத்த அவகாசம் வழங்க வேண்டும். அதற்கு கட்டிடங்களை திறக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அப்போது வீட்டுவசதி வாரியமும் கட்டிடங்களை மாற்றியமைக்க அனுமதி அளித்தது. அதற்கு 3 மாத கால அவகாசமும் வழங்கப்பட்டது. இதனையடுத்து 24 கட்டிடங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் 3 மாதங்கள் ஆகியும் தற்போது வரை அந்த 24 கட்டிடங்களும் மாற்றியமைக்கப்படவில்லை. இதனால் அந்த கட்டிடங்கள் மீது மீண்டும் நடவடிக்கை எடுக்க வில்பட்டி ஊராட்சி மன்ற தலைவருக்கு, வட்டார வளர்ச்சி அலுவலர் அறிவுறுத்தினார். இதைத்தொடர்ந்து அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது. அதில், அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 1-ந்தேதி மின்சார துண்டிப்பு செய்வதுடன், 'சீல்' வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்