சம்பா நடவு பணியில் ஈடுபடும் வடமாநில தொழிலாளர்கள்
கும்பகோணம் பகுதியில் சம்பா நடவு பணியில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கும்பகோணம்:
சம்பா சாகுபடி
கும்பகோணம் சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான விவசாயிகள் சம்பா சாகுபடி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் முன்னதாக நடவு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் விவசாயிகள் நடவு பணிகளை தொடங்கியுள்ளனர்.
தற்போது விவசாய பணிகளுக்கு உள்ளூர்தொழிலாளர்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பெரும்பாலான விவசாயிகள் எந்திர நடவு முறையை மேற்கொண்டு வருகின்றனர்.
வடமாநில தொழிலாளர்கள் நடவு பணி
இருந்தபோதிலும் ஒரு சில விவசாயிகள் எந்திர நடவுக்கு மாறாக வட மாநில தொழிலாளர்களை கொண்டு நடவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். உள்ளூரில் விவசாய தொழிலாளர்கள் கிடைப்பது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் வட மாநில தொழிலாளர்களைக் கொண்டு நடவு பணிகளை மேற்கொள்வதால் பண விரயம் மற்றும் நேர விரயம் வெகுவாக குறைவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து கும்பகோணம் அருகே உள்ள மாங்குடி பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், தற்போது விவசாய பணிகளுக்கு கூலி ஆட்கள் கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.
கூடுதல் சம்பளம்
சிரமப்பட்டு கூலி ஆட்களை அழைத்து வந்தாலும் அவர்களுக்கு கூடுதல் சம்பளம் வழங்குவதோடு நேர விரயமும் அதிகமாகிறது. இதனால் விவசாய பணிகளுக்கு ஏற்படும் செலவு அதிகரிக்கிறது. இந்த நிலையில் வட மாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் தமிழகத்துக்கு வந்து தங்கி பல குழுக்களாக விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு வழங்கும் சம்பளம் உள்ளூர் தொழிலாளர்களுக்கு வழங்கும் சம்பளத்துடன் மிகவும் குறைவாக உள்ளது. மேலும் இவர்கள் குழுக்களாக வந்து குறைந்த நேரத்தில் நடவு உள்ளிட்ட பணிகளை முடித்துவிட்டு சென்று விடுகின்றனர்.
சாதாரணமாக ஒரு ஏக்கருக்கு உள்ளூர் தொழிலாளர்களை கொண்டு நடவு பணி செய்யும்போது ரூ.8 ஆயிரம் வரையில் செலவு ஏற்படும். ஆனால் வட மாநில தொழிலாளர்கள் 10 பேர் கொண்ட குழுவினருக்கு ஏக்கருக்கு ரூ.4 ஆயிரத்து 500 வீதம் வழங்கப்படுகிறது. இவர்கள் ஒரு மணி நேரத்திற்குள் நாற்றுகளை பறித்து நடவு செய்து விடுகின்றனர்.இதனால் செலவும், நேரமும் வெகுவாக குறைகிறது என்றனர்.
நல்ல வருவாய் கிடைக்கிறது
இதுகுறித்து வட மாநில தொழிலாளர்கள் கூறுகையில்,நாங்கள் 30-க்கும் மேற்பட்டோர் கும்பகோணம் அருகே உள்ள ஆவூர் பகுதியில் தற்காலிக கூடாரம் அமைத்து தங்கியிருந்து விவசாய பணிகளை செய்து வருகிறோம். ஏராளமான விவசாயிகள் எங்களை முன்கூட்டியே பதிவு செய்து வைத்து தங்களது விவசாய பணிகளுக்கு எங்களை அழைத்து செல்கின்றனர்.
தினமும் ஏராளமான விவசாயிகள் எங்களை அழைப்பதால் நாள்தோறும் வேலை கிடைக்கிறது. இதனால் நாள் கணக்கில் இல்லாமல் மணிக்கணக்கில் நல்ல வருவாய் கிடைக்கிறது.என்றனர்.