ராமநாதபுரம்: தடை செய்யப்பட்ட வலைகளில் மீன்பிடித்த தூத்துக்குடி மீனவர்கள் - படகு, வலைகள் பறிமுதல்

தூத்துக்குடியை சேர்ந்த 23 மீனவர்களின் படகுகள் மற்றும் வலைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2024-11-24 09:01 GMT

ராமநாதபுரம்,

கடல்வளத்தை சீரழிக்கும் வகையில் உள்ள இரட்டை சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க கூடாது என அரசு தடை செய்துள்ள நிலையில், ஒரு சில மீனவர்கள் அதிகாரிகளுக்கு தெரியாமல் இரட்டை சுருக்குமடி வலையை பயன்படுத்தி வருகின்றனர். இது தொடர்பாக மீன்வளத்துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார்கள் அளிக்கப்பட்டு வந்தன.

இரு தினங்களுக்கு முன்பு ராமேஸ்வரத்தில் இரட்டை சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்த மீனவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள ரோஸ்மாநகர் பகுதியில், தூத்துக்குடியை சேர்ந்த மீனவர்கள் சிலர் இரட்டை சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிப்பதாக மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில் அங்கு விரைந்து சென்ற அதிகாரிகள், இரட்டை சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடித்த 23 மீனவர்களின் வலைகள் மற்றும் 2 நாட்டுப்படகுகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Full View
Tags:    

மேலும் செய்திகள்