அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது - எடப்பாடி பழனிசாமி பேச்சு

சட்டமன்றத் தேர்தலை நமக்கான வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Update: 2024-11-24 13:16 GMT

சென்னை,

தமிழகத்தின் முதல் பெண் முதல்-அமைச்சரும், எம்.ஜி.ஆரின் மனைவியுமான மறைந்த ஜானகியின் நூற்றாண்டு விழா, அ.தி.மு.க. சார்பில் வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றுவரும் இந்த விழாவில், நூற்றாண்டு விழா மலரை வெளியிட்டு, ஜானகியுடன் பயணித்தவர்களுக்கு நினைவுப் பரிசுகளையும் அவர் வழங்கினார்.

இதன் பின்னர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது;

தமிழ்நாட்டில் 31 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை தந்தது அதிமுகதான். நாட்டில் தமிழ்நாடு முதலிடத்திற்கு வர அதிமுக அரசு தீட்டிய திட்டங்களே காரணம். அதிமுக பிளவுபட்டபோது ஜானகி, ஜெயலலிதா ஒருமித்த கருத்தோடு பேசி இணைய வழிவகுத்தனர். எம்ஜிஆர் உயர்வுக்கு துணை நின்றவர் ஜானகி அம்மையார்.

அதிமுகவை முடக்க நினைப்பவர்களின் எண்ணம் நிறைவேறாது. எப்போதெல்லாம் அதிமுக சோதனைகளை சந்திக்கிறதோ, அப்போதெல்லாம் வெற்றி பெற்றதுதான் வரலாறு. இன்று பலர் அதிமுக தொடர் தோல்வி அடைவதாக பேசுகிறார்கள். திமுக தொடர் தோல்வியை சந்திக்கவில்லையா. திமுக 10 ஆண்டுகளாக தேர்தலில் தொடர் தோல்வியை சந்தித்து இன்று ஆட்சியில் இல்லையா? அதிமுக என்பது குடும்ப கட்சி. திமுக என்பது கருணாநிதியின் குடும்ப கட்சி.

அதிமுகவில் வெற்றி என்பது நிர்ணயிக்கப்பட்டது. தேர்தலுக்கு இன்னும் 15 மாத காலம்தான் உள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலை நமக்கான வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். குறுகிய காலத்தில் தேர்தலுக்கு தயாராவோம்"

இவ்வாறு அவர் பேசினார்.

 

Tags:    

மேலும் செய்திகள்