பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இல்லை: காவிரி பாசன விவசாயிகள் ஏமாற்றம்-தமிழக அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பு

தமிழக அரசின் தற்போதைய பொங்கல் தொகுப்பு குறித்த அறிவிப்பில், கரும்பு இடம்பெறாத நிலையில், எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி காவிரி பாசன பகுதி கரும்பு விவசாயிகள் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாகி உள்ளனர். எனவே தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்புக்காக கரும்பை கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

Update: 2022-12-24 22:18 GMT

எடப்பாடி:

கரும்பு சாகுபடி

எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி, கூடக்கல், குப்பனூர், கோட்டைமேடு, கோனேரிப்பட்டி உள்ளிட்ட காவிரி பாசன பகுதிகளில் அதிக அளவில் விவசாயிகள் செங்கரும்பு நட்டு வளர்த்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள மண்வளம் மற்றும் நிறைந்த நீர் வளம், தட்பவெப்பம் உள்ளிட்டவை கரும்பு பயிருக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடப்பாண்டில் மிக அதிகப்படியான பரப்பளவில் இப்பகுதியில் கரும்பு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வத்துடன் ஈடுபட்டனர்.

கடந்த சில ஆண்டுகளாக இப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள கரும்புகள் பெரும்பாலும் சேலம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, பொங்கல் பரிசாக வினியோகிக்கப்பட்டு வந்தது.

பொங்கல் பரிசு தொகுப்பில் இல்லை

குறிப்பாக நடப்பாண்டில் மேட்டூர் அணையில் உரிய நேரத்தில் தண்ணீர் திறப்பு இருந்ததாலும் மற்றும் பருவ மழை குறித்த நேரத்தில் பெய்து வந்த நிலையில், வழக்கத்தை விட கூடுதலான பரப்பளவில் காவிரி பாசன பகுதி விவசாயிகள் கரும்பு பயிரிட்டிருந்தனர்.

இந்த நிலையில், 2023-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இடம்பெறாது என்ற அறிவிப்பு, கரும்பு விவசாயிகள் மத்தியில் பெரியதொரு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோரிக்கை

கூட்டுறவு சங்கங்கள் மூலம் கரும்பு கொள்முதல் செய்யப்படும் என்ற நம்பிக்கையில் இருந்த விவசாயிகள் தற்போது அதிக அளவில் அறுவடைக்கு தயாராக இருக்கும் செங்கரும்புகளை என்ன செய்வது? என்று தெரியாமல் திகைத்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 3 வாரங்களே உள்ள நிலையில, ஒரு சில விவசாயிகள் தங்கள் வயல்களில் விளைந்த கரும்புகளை அறுவடை செய்து அருகில் உள்ள மாவட்டங்களில் உள்ள மொத்த வியாபாரிகளுக்கு விற்பனைக்காக அனுப்ப தொடங்கி உள்ளனர்.

இருப்பினும் அதிகளவிலான விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்துள்ளதால் கரும்புக்கு உரிய விலை கிடைக்குமா என்ற கவலையும் விவசாயிகளிடம் எழுந்துள்ளது. இந்த நிலை குறித்து அரசு ஆலோசித்து மீண்டும் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பை சேர்க்க வேண்டுமென காவிரி பாசன பகுதி கரும்பு சாகுபடி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரும்பு விவசாயிகள் கருத்து

கோரிக்கைகள் குறித்து காவிரி பாசன கரும்பு விவசாயிகள் கூறிய கருத்துக்களை காண்போம்.

பாபு (பூலாம்பட்டி கூடக்கல்):-

கூடக்கல் வடக்கு பகுதியில் உள்ள எனது தோட்டத்தில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் செங்கரும்பு சாகுபடி செய்துள்ளேன். கடந்த சில ஆண்டுகளாக எங்கள் தோட்டத்தில் விளையும் கரும்புகளை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவே விற்பனை செய்து வருகிறேன். கடந்த ஆண்டு தர்மபுரி மாவட்டத்திற்கு உட்பட்ட அரூர் கூட்டுறவு சங்கத்தின் மூலம் எனது தோட்டத்தில் விளைந்த கரும்புகளை விற்பனை செய்தேன். இதில் 20 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு சுமார் 400 ரூபாய் வரை கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் மொத்த கொள்முதல் செய்தனர்.

ஆனால் நடப்பாண்டில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இடம்பெறாத நிலையில் இன்றுவரை எனது தோட்டத்தில் அறுவடைக்கு தயாராக உள்ள, கரும்புகளை கூட்டுறவு சங்க பிரதிநிதிகளே, தனியார் வியாபாரிகளோ கொள்முதல் செய்ய முன்வராத நிலையில் அதிக செலவு செய்து சாகுபடி செய்த கரும்புகளை என்ன செய்வது என்று தெரியாமல் என் போன்ற பல விவசாயிகள் இப்பகுதியில் வேதனையுடன் காத்திருக்கிறார்கள்.

சர்க்கரை ஆலைகளுக்கு...

முனியப்பன் (பூலாம்பட்டி ஓணாம்பாறையூர்):-

தமிழக அரசு கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்யும் என்ற நம்பிக்கையில், காவிரி பாசன பகுதியில் வழக்கத்தை விட நடப்பாண்டில் அதிக பரப்பளவில் விவசாயிகள் செங்கரும்புகளை சாகுபடி செய்துள்ளனர். அதேபோல் நடப்பாண்டில் இடுபொருள்கள் விலை மற்றும் வேலையாட்கள் கூலி கணிசமாக உயர்ந்துள்ள நிலையில், ஒரு ஏக்கருக்கு சுமார் 2 லட்சம் ரூபாய் வரை செலவு செய்து சாகுபடி செய்யப்பட்ட கரும்பை தற்போது யாரும் விலை கேட்காத நிலையில் அவற்றை சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்பும் நிலையில் ஒரு டன் கரும்பு சுமார் ரூ.1,000 முதல் ரூ.1,200 வரையே விலை போக வாய்ப்புள்ளது.

இது செங்கரும்பு விவசாயிகளுக்கு பெரியதொரு நஷ்டத்தை ஏற்படுத்தும் நிலையை உணர்ந்து, விவசாயிகளின் கண்ணீரை துடைக்கும் வகையில், அரசு நடப்பு ஆண்டில் பொங்கல் தொகுப்பிலும் கரும்பை சேர்க்க வேண்டும் என்று இப்பகுதி கரும்பு விவசாயிகள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.

வேதனை அடைந்து உள்ளோம்

குழந்தைவேலு (பூலாம்பட்டி):-

எனது தோட்டத்தில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் சம்பா ரக செங்கரும்பு பயிர் செய்துள்ளேன். கடந்த ஆண்டு எனது தோட்டத்தில் விளைந்த கரும்புகளை ஊட்டி பகுதியைச் சேர்ந்த கூட்டுறவு சங்கத்தினர் மொத்த கொள்முதல் செய்தனர். மேலும் உடனடியாக அதற்கான தொகையும் எங்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசின் திடீர் அறிவிப்பால் இப்பகுதி கரும்பு விவசாயிகள் பெரும் வேதனை அடைந்து உள்ளோம்.

தற்போது என் தோட்டத்தில் அறுவடைக்கு தயாராக உள்ள கரும்புகளை விற்பனை செய்வதற்காக தனியார் வியாபாரிகள் பலரை அணுகினேன். அவர்கள் அனைவருமே தற்போதைய நிலையில் கரும்பை கொள்முதல் செய்திட வாய்ப்பில்லை என புறக்கணிக்கிறார்கள். கடன்பட்டு கரும்பு சாகுபடி செய்த என் போன்ற விவசாயிகளின் நிலையை தமிழக அரசு தயவுகூர்ந்து எண்ணிப்பார்த்து நடப்பாண்டு பொங்கல் தொகுப்பில் கரும்பை சேர்க்க வழிவகை செய்திட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்