சிறை தண்டனையை எதிர்த்து நிர்மலாதேவி மேல்முறையீடு - மதுரை ஐகோர்ட்டில் இன்று விசாரணை

மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2024-05-08 02:27 GMT

மதுரை,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் நிர்மலாதேவி. அதே பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணியாற்றி வந்தார். கடந்த 2018-ம் ஆண்டில் இவர் தன்னிடம் படித்த மாணவிகளை பாலியல் ரீதியில் தவறான பாதைக்கு அழைத்து செல்லும் வகையில் செல்போனில் பேசியதாக புகார் எழுந்தது.

இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக அருப்புக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, பேராசிரியை நிர்மலாதேவி, அவருக்கு உதவியதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரை கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.

வழக்கை ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகளிர் கோர்ட்டு விசாரித்தது. சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர், பேராசிரியர்கள், மாணவிகள், அவர்களின் பெற்றோர் என நூற்றுக்கும் மேற்பட்ட சாட்சிகள் தங்களது சாட்சியங்களை பதிவு செய்தனர். அனைத்து தரப்பு விசாரணையும் முடிவடைந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த 29, 30-ந்தேதிகளில் அளிக்கப்பட்டது.

இதில், பேராசிரியை நிர்மலாதேவிக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 லட்சத்து 42 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. பேராசிரியர் முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த தீர்ப்பின் அடிப்படையில் நிர்மலாதேவியை மதுரை சிறையில் போலீசார் அடைத்தனர். இந்தநிலையில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து பேராசிரியை நிர்மலாதேவி மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று (புதன்கிழமை) மதுரை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்