காதல் திருமணம் செய்த 5 நாளில் புதுமண தம்பதி வெட்டிக்கொலை - விருந்து வைப்பதாக அழைத்து பெண்ணின் அண்ணன் வெறிச்செயல்

கும்பகோணம் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியை பெண்ணின் அண்ணன் வெட்டிக் கொலை செய்து உள்ளார்.

Update: 2022-06-13 13:41 GMT

திருப்பனந்தாள்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சோழபுரம் துலுக்கவேலி அய்யாகோயில் தெருவைச் சேர்ந்தவர் சேகர். இவரது மகள் சரண்யா(24). இவர் நர்சிங் படித்துவிட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார்.

அதே போல், திருவண்ணாமலை மாவட்டம் பொன்னூரைச் சேர்ந்தவர் வடிவேல் மகன் மோகன்(31). இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இருவரும் வேலை பார்த்து வந்தபோது காதலித்துள்ளனர். இவர்களது காதலை பெண்ணின் வீட்டார் ஏற்க மறுத்துள்ளனர்.

பெண்ணின் உறவினர் ஒருவருக்கு, சரண்யாவை திருமணம் செய்து கொடுக்க பெற்றோர் திட்டமிட்டு வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 5 தினங்களுக்கு முன்பு இருவரும் சென்னையில் திருமணம் செய்து கொண்டனர்.

இதுகுறித்து தகவலை சரண்யா தனது பெற்றோருக்கு தெரிவித்தபோது. அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் சரண்யாவின் அண்ணன் மணமக்களுக்கு விருந்து வைக்க வேண்டும் எனக்கூறி வரவழைத்துள்ளார். இதை நம்பி இருவரும் சென்னையிலிருந்து சோழபுரம் துலுக்கவேலிக்கு வந்தனர். இன்று மாலை வீட்டுக்கு வந்தபோது, அங்கு வந்த சரண்யாவின் அண்ணன் சக்திவேல்(31) மற்றும் உறவினர் ரஞ்சித் இருவரும் சேர்ந்து வீட்டு வாசலில் புதுமணத் தம்பதியை அரிவாளால் வெட்டியதில், அதே இடத்தில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவலை பொதுமக்கள் சோழபுரம் போலீசாருக்கு தெரிவித்தனர். பின்னர் சோழபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இருவரது உடலையும் கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். இச்சம்பவம் குறித்து சோழபுரம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து தலைமறவான சக்திவேல் மற்றும் ரஞ்சித்தை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்