ரூ.10 கோடியில் புதிய அலுவலகம்
சிவகாசி மாநகராட்சிக்கு ரூ.10 கோடியில் புதிய அலுவலகம் கட்டப்பட்டு வரும் நிலையில் அதனை அமைச்சர்கள் நேற்று திடீர் ஆய்வு செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி-சாத்தூர் ரோட்டில் ரூ.10 கோடி செலவில் புதிய அலுவலக கட்டிடம் மற்றும் வணிக வளாகம் கட்டும் பணி நடைபெற்று வருகின்றன. இதனை அமைச்சர்கள் கே.என். நேரு, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அதனை தொடர்ந்து சிவகாசி மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் அமைச்சர்கள் கே. என்.நேரு, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டு கவுன்சிலர்களிடம் குறைகளை கேட்டனர். இதில் கலெக்டர் ஜெயசீலன், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் குமார், எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், அசோகன், தங்கப்பாண்டியன், சிவகாசி மாநகராட்சி ஆணையாளர் சங்கரன், துணை மேயர் விக்னேஷ் பிரியா காளிராஜன், சிவகாசி யூனியன் துணைத்தலைவர் விவேகன்ராஜ், மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்கு பின்னர் அமைச்சர் கே.என். நேரு நிருபர்களிடம் கூறியதாவது:-சிவகாசி மாநகராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் குடிநீர் பிரச்சினை உள்ளதாக கவுன்சிலர்கள் கூறினர்.. அது சரி செய்யப்படும். தேவையான பைப் லைன் அமைத்து தரப்படும். திருத்தங்கல் பகுதியில் சாலைகள் சேதமடைந்து காணப்படுவதாக கூறினார்கள். மண்டல அலுவலகம் செயல்பட தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.மாநகராட்சி பகுதியில் தேவைப்படும் அடிப்படை வசதிகளை செய்ய தேவையான நிதி ஒதுக்கி தரப்படும். ராஜபாளையம் பகுதியில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாக புகார் வந்தது. அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் உடனிருந்தனர்.