நெல்லை: கோதையாறு வனப்பகுதியில் விடப்பட்ட அரிக்கொம்பன் யானை

முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டும் இன்று அதிகாலை கோதையாறு வனத்தில் அரிக்கொம்பன் யானை விடப்பட்டது.

Update: 2023-06-06 04:30 GMT

அம்பை [திருநெல்வேலி],

தேனி மாவட்டத்தை கலங்கடித்த அரிக்கொம்பன் யானை நேற்று மாலை 5.20 மணி அளவில் நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு வன சோதனை சாவடி பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. அதற்கு மேல் வனத்துறையினர் வாகனங்களை தவிர மற்ற வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால் பத்திரிகையாளர்கள், வனத்துறையினருக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த நிலையில் அரிக்கொம்பன் யானையை வனப்பகுதியில் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திடீரென்று சோதனை சாவடியை முற்றுகையிட்டு சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் இந்த பகுதியில் பல உயிர்களை பலி வாங்கிய அரிக்கொம்பன் யானையை விட்டால் உயிர் சேதம் ஏற்படும். எனவே, வனத்துறையினர் வேறு ஏதேனும் முகாமில் வைத்து பராமரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் நெல்லை மாவட்டம் கோதையாறு வனப்பகுதியில் அரிக்கொம்பன் யானை விடப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலுதவி சிகிச்சை அளித்து, இன்று அதிகாலை கோதையாறு வனத்தில் அரிக்கொம்பன் யானை விடப்பட்டுள்ளது.

முன்னதாக மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட அரிக்கொம்பன் யானையின் தும்பிக்கையில் பெரிய அளவில் வெட்டுக்காயம் ஏற்பட்டு இருந்தது. அந்த காயம் எப்படி ஏற்பட்டது என்று தெரியவில்லை. கம்பம் நகருக்குள் புகுந்த போது 2 இடங்களில் கம்பி வேலிகளை தூக்கி வீசியபோதும் அதன் தும்பிக்கையில் சிறிய காயம் இருந்தது. தற்போது அந்த காயம் மேலும் பெரிதாகி இருப்பதாக கூறப்படுகிறது.

லாரியில் ஏற்றிச் சென்ற போது யானை தனது தும்பிக்கையை வெளியே தொங்கவிட்டபடி சென்றது. அதில் இருந்த காயத்தை பார்த்த மக்கள் சிலர் யானையின் துன்பத்தை எண்ணி கண் கலங்கினர். மேலும் அந்த யானையின் முதுகு பகுதியிலும் காயங்கள் இருந்தன. தலை மற்றும் முகம் பகுதியில் அலர்ஜி போன்று காட்சியளித்தது. மீண்டும் வனப்பகுதிக்குள் விடும் முன்பு அதற்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதும் மக்களின் கோரிக்கையாக இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்