திருமங்கலம் அருகே கல்குவாரியால் விவசாயத்திற்கு பாதிப்பு- கருத்து கேட்பு கூட்டத்தில் புகார்

திருமங்கலம் அருகே கல்குவாரியால் விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்படும் என கருத்து கேட்பு கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.

Update: 2023-08-24 20:43 GMT

                                திருமங்கலம், 

திருமங்கலம் அருகே கல்குவாரியால் விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்படும் என கருத்து கேட்பு கூட்டத்தில் புகார் தெரிவிக்கப் பட்டது.

கருத்து கேட்பு கூட்டம்

திருமங்கலம் அருகே உள்ள பொன்னமங்கலம் கிராம கல்குவாரி புதுப்பித்தல் தொடர்பாக உரப்பனூர் கிராமத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சுற்றுச்சூழல் மாசுபாடு பொறியாளர் குணசேகரன் தலைமை தாங்கினார். திருமங்கலம் கோட்டாட்சியர் சாந்தி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் விவசாய அமைப்பைச் சேர்ந்த நேதாஜி பேசும்போது, கல்குவாரி செயல்படுவதினால் இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறைகிறது. அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு குடியிருப்பு பகுதியில் இருந்து 300 மீட்டர் தூரத்தில் கல்குவாரி இருக்க வேண்டும்.

ஆனால் விதிமுறைகளை மீறி 300 மீட்டர் தூரத்திற்குள் குவாரி செயல்படுகிறது. அங்கு விதிமுறைகளை பின்பற்றி வெடிப்பது கிடையாது. இதன் மூலம் நில அதிர்வு ஏற்படக்கூடிய அபாயம் ஏற்படும். தமிழ்நாட்டில் முக்கியமாக ஆறு இடங்களில் நில அதிர்வு ஏற்படும் என தெரிய வருகிறது. இதில் மதுரை மாவட்டம் ஒன்று எனக் கூறப்பட்டுள்ளது. இதனை அதிகாரிகள் அரசு கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என பேசினார்.

பாதிப்பு

ஹார்விப்பட்டியைச் சேர்ந்த காராமணி பேசுகையில், குவாரி வேண்டும் என்று கேட்டு ஆதரவாக வந்துள்ளவர்கள் உள்ளூர் மக்கள் கிடையாது. வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அத்துடன் வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கி வேலை செய்வதால் உள்ளூர் விவசாயம் பாதிக்கப்படுவது தெரியாது.

குவாரிக்கு ஆதரவாக பேசுபவர்கள் அனைவரும் பணம் கொடுத்து அழைத்து வந்தவர்கள். குவாரி அருகே உள்ள சிலருடைய விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குவாரி நடத்துவதற்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல.போதிய ஆவணங்கள் அரசிடம் சமர்ப்பித்து விட்டு குவாரிகள் நடத்தலாம்.

வாக்குவாதம்

கருத்து கேட்பு கூட்டம் நடத்துவதற்கு முன்பு போதிய அளவில் சுவரொட்டிகளை ஒட்டி அருகில் உள்ள கிராம மக்கள் கலந்து கொள்ளுமாறு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய பின்பு கருத்துக் கேட்பு நடத்த வேண்டும் என பேசினார்.

இதனைத் தொடர்ந்து குவாரி ஆதரவாளர் ஆலம்பட்டி சந்திரா பேசுகையில், நாங்கள் குவாரியில் வேலை பார்த்து அதன் மூலம் வரும் வருமானத்தில் வாழ்ந்து வருகிறோம். தற்போது விவசாயம் முழுவதும் விஷம் ஆகிவிட்டது. அப்படிப்பட்ட விவசாயத்தை நிறுத்த வேண்டும் என கூறினார்.

விவசாயத்தை நிறுத்த வேண்டும் என்று கூறிய உடனே அங்கிருந்த விவசாயிகளுக்கும், கல்குவாரி ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீசார் தலையிட்டு சமாதானம் செய்தனர். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் அனைவருடைய கருத்துக்களையும் கேட்ட அரசு அதிகாரிகள் அரசின் கவனத்திற்கு இதனை அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்