கம்பம் அருகேகுப்பை தொட்டியாக மாறி வரும் கண்மாய்

கம்பம் அருகே கேசவபுரம் கண்மாய் மர்ம நபர்கள் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் கண்மாய் குப்பை தொட்டியாக மாறி வருகிறது.

Update: 2023-10-02 18:45 GMT

கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டியில் இருந்து சுருளி அருவி செல்லும் சாலையில் கேசவபுரம் கண்மாய் உள்ளது. சுமார் 33 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த கண்மாய் மூலம் 104 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் கூத்தநாச்சி ஓடை மூலம் கேசவபுரம் கண்மாய்க்கு தண்ணீர் வருகிறது.

பொதுப்பணித்துறை மஞ்சளாறு வடிநிலக்கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கண்மாயில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வண்டல் மண் அள்ளும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் அரசு விதியை மீறி விவசாய நிலங்களுக்கு அனுமதி பெற்று கட்டுமானம் மற்றும் செங்கல் சூளைகளுக்கு எடுத்துச் செல்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில் பொதுப்பணித்துறையினர் கண்மாயில் வண்டல் மண் அள்ள தடை விதித்தனர்.

ஆனால் பள்ளம் மேடாக உள்ள கண்மாயை பொதுப்பணித்துறையினர் சமன்படுத்தப்படவில்லை. தற்போது கண்மாயில் இரவு நேரத்தில் மர்ம நபர்கள் குப்பைகளை கொட்டி விட்டு செல்கின்றனர். இதனால் கண்மாய் குப்பை தொட்டியாக மாறி வரும் அவல நிலை உள்ளது. மேலும் அதிகமான மழை பெய்யும் போது குளத்தில் தண்ணீர் தேக்கி வைப்பதில் சிக்கல் ஏற்படும். எனவே கண்மாயில் குப்பைகளை கொட்டுபவர்கள் மீது பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்