கள்ளக்குறிச்சி அருகே சாராயம் விற்பனையை தடுக்க கலெக்டரிடம் மனு கொடுத்த பெண்கள் சிறிது நேரத்திலேயே 5 பேர் கைது

கள்ளக்குறிச்சி அருகே சாராயம் விற்பனையை தடுக்கக்கோரி கலெக்டரிடம் பெண்கள் மனு கொடுத்தனர். மனுகொடுத்த சிறிது நேரத்திலேயே கலெக்டர் நடவடிக்கையின்பேரில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-10-17 18:45 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் அடுத்த வடக்கனந்தல் பேரூராட்சி அம்பேத்கர் காலனி பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். தொடர்ந்து அவர்கள் கலெக்டர் ஷ்ரவன் குமாரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில், அம்பேத்கர் காலனி பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இங்கு 2 இடங்களில் சாராயம் மற்றும் கஞ்சா விற்பனை நடைபெற்று வருகிறது. இதனால் மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகும் நிலை உள்ளது. மேலும் ஆண்கள் வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு தகராறில் ஈடுபடுகின்றனர். இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்தும், சாராயம் மற்றும் கஞ்சா விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மாவட்ட கலெக்டராகிய நீங்கள் உடனடியாக இதில் தலையிட்டு சாராயம் மற்றும் கஞ்சா விற்பனையை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

5 பேர் கைது

மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் உடனடியாக இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க கச்சிராயப்பாளையம் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் கச்சிராயப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையிலான போலீசார் அம்பேத்கர் காலனி பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சாராயம் விற்றதாக வடக்கனந்தல் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த கருப்பன் (வயது 45), தாகப்பிள்ளை மனைவி செல்வராணி(34), 17 வயது சிறுவன், கரடி சித்தூர் கிராமத்தை சேர்ந்த சக்திவேல்(40), கல்வராயன்மலை பன்னிப்பாடி கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை(40) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 100 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்