தேவதானப்பட்டி அருகேசரக்கு வேன்-அரசு பஸ் நேருக்கு நேர் மோதல்; டிரைவர் பலி

தேவதானப்பட்டி அருகே சரக்குவேன்- அரசு பஸ் நேருக்கு நேர் மோதிய விபத்தில் டிரைவர் பலியானார்.

Update: 2023-08-11 18:45 GMT

தேனியில் இருந்து முட்டைகளை ஏற்றிக்கொண்டு சரக்கு வேன் ஒன்று நேற்று முன்தினம் இரவு ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்தது. வேனை திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே உள்ள கழுகரையை சேர்ந்த அருண்குமார் (வயது 23) என்பவர் ஓட்டினார். பெரியகுளம்-வத்தலக்குண்டு சாலையில் காட்ரோடு அருகே போலீஸ் சோதனை சாவடியில் வேன் வந்தது.

அப்போது மதுரையில் இருந்து பெரியகுளம் நோக்கி சென்ற அரசு பஸ்சும், வேனும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதின. இந்த விபத்தில் சரக்கு வேன் டிரைவர் அருண்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பஸ்சில் பயணம் செய்த பெரியகுளம் தென்கரையை சேர்ந்த ராஜேஸ்வரி (51), முத்துப்பாண்டி (40) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தேவதானப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலியான அருண்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். இந்த விபத்து தொடர்பாக திண்டுக்கல்லை சேர்ந்த அரசு பஸ் டிரைவரான முத்துவேல் (53) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்