நவராத்திரி விழா இன்று தொடக்கம்
கூடலூரில் கொலு பொம்மைகள் அலங்காரத்துடன் சக்தி விநாயகர் கோவில் மண்டபத்தில் நவராத்திரி விழா இன்று தொடங்குகிறது.;
கூடலூரில் கொலு பொம்மைகள் அலங்காரத்துடன் சக்தி விநாயகர் கோவில் மண்டபத்தில் நவராத்திரி விழா இன்று தொடங்குகிறது.
நவராத்திரி விழா
நாடு முழுவதும் நவராத்திரி விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. கூடலூர் சக்தி விநாயகர் கோவில் வளாகத்தில் உள்ள துர்க்கை அம்மன் சன்னதியில் நவராத்திரி விழா தொடங்கி வருகிற 23-ந் தேதி வரை நடக்கிறது.
இதையொட்டி நவராத்திரி கொலு மண்டபத்தில் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி உள்ளிட்ட தெய்வங்களின் விக்ரகங்கள் மற்றும் ஏராளமான கொலு பொம்மைகள் அலங்கரித்து வைக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து நேற்று காலை 8 மணிக்கு மூலவர் சக்தி விநாயகருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து கும்ப கலசம் ஸ்தாபித்து ஹோமம் உள்ளிட்ட விசேஷ பூஜைகள் நடைபெற்றது.
திருவிளக்கு பூஜை
பின்னர் கொலு மண்டபத்தில் கும்ப கலசம் வைக்கப்பட்டு சிறப்பு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து இன்று முதல் துர்கா, லட்சுமி, சரஸ்வதி தெய்வங்களுக்கு 23-ந் தேதி வரை தினமும் மாலை 5 மணி முதல் கோவில் அர்ச்சகர் கார்த்திகேய குருக்கள் தலைமையில் கணபதி ஹோமம், கலச பூஜை, லலிதா சகஸ்ரநாமம் உள்பட பல்வேறு விசேஷ பூஜைகள் நடக்கிறது.
முன்னதாக 20-ந் தேதி மதியம் 2.30 மணிக்கு லட்சுமி குபேர திருவிளக்கு பூஜை நடக்கிறது. 24-ந் தேதி விஜயதசமியை ஒட்டி காலை 7 மணி முதல் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடக்கிறது. தினமும் இரவில் ஆன்மிக நடன நாட்டிய நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை நவராத்திரி விழா குழுவினர் செய்து வருகின்றனர்.