கோவில்களில் நவராத்திரி விழா தொடங்கியது
பெரம்பலூரில் உள்ள கோவில்களில் நவராத்திரி விழா தொடங்கியது.;
மதுரகாளியம்மன் கோவில்
பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. தொடர்ந்து உற்சவ அம்மனுக்கு மதுரகாளியம்மன் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். நவராத்திரி விழாவில் ஒவ்வொரு நாளும் மதுரகாளியம்மன் ஒவ்வொரு அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கவுள்ளார்.
அம்பு போடும் நிகழ்ச்சி
வருகிற 23-ந்தேதி ஆயுதபூஜை விழாவும், சரஸ்வதி அலங்காரம் நடக்கிறது. 24-ந்தேதி விஜயதசமியன்று மகிஷாசுரமர்த்தினி அலங்காரமும், இரவு 8 மணிக்கு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியும், அதனைத்தொடர்ந்து அம்மன் புறப்பாடு மற்றும் அம்பு போடுதல் நிகழ்ச்சியுடன் நவராத்திரி விழா நிறைவு பெறுகிறது. மேலும் கோவிலில் நவராத்திரி கொலு வைக்கப்பட்டிருந்தது. இதேபோல் பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவிலிலில் நவராத்திரி முதல் நாள் விழாவில் உற்சவ அம்மனுக்கு மரகதவல்லித்தாயார் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.
பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் உற்சவ அம்மனுக்கு அகிலாண்டேஸ்வரி அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. பெரம்பலூர் தெப்பக்குளம் அருகே 24-ந்தேதி அம்பு போடுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோவிலில் உற்சவ அம்மனுக்கு வாலாம்பிகை அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. கோவில்களில் நடந்த நவராத்திரி விழாவில் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல் வீடுகளிலும் நவராத்திரி விழாவையொட்டி கொலு வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.