வழிதவறி புனே சென்ற நாகை மூதாட்டி 9 ஆண்டுகளுக்கு பிறகு மீட்பு

வழிதவறி புனே சென்ற நாகை மூதாட்டி 9 ஆண்டுகளுக்கு பிறகு மீட்பு

Update: 2023-08-03 18:45 GMT

மகனை பார்க்க சென்னைக்கு ரெயிலில் சென்றபோது வழிதவறி புனே சென்ற நாகை மூதாட்டி 9 ஆண்டுகளுக்கு பிறகு மீட்கப்பட்டார்.

மாயமான மூதாட்டி

நாகை மாவட்டம் திருக்கண்ணபுரம் புத்தகரம் கிராமத்தை சேர்ந்தவர் சிவப்பிரகாசம். இவருடைய மனைவி மல்லிகா(வயது 60). இவர்களுடைய மகன்கள் தங்கபிரகாஷ், மகேஷ். திருக்கண்ணபுரம் புத்தகரம் பகுதியில் வசிக்கும் தங்கபிரகாஷ் வீட்டில் மல்லிகா வசித்து வந்தார்.

கடந்த 2014-ம் ஆண்டு சென்னை அம்பத்தூர் கலைவாணர் நகரில் வசிக்கும் மற்றொரு மகன் மகேஷ் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்னை சென்ற மல்லிகா, அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இதையடுத்து மகேஷ் சென்னை அம்பத்தூர் எஸ்டேட் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல்

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மராட்டிய மாநிலம் மும்பை அருகே உள்ள புனேயில் இருந்து நாகை போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங்கின் செல்போன் எண்ணிற்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், புனேயில் உள்ள ஆசிரமத்தில் தங்கி உள்ள மூதாட்டி ஒருவர், தான் நாகை மாவட்டத்தை சேர்ந்தவர் என கூறுவதாக தெரிவித்தார். மேலும் மூதாட்டி கூறிய முகவரியையும் போலீஸ் சூப்பிரண்டிடம் தெரிவித்தார்.

அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், மகனை பார்க்க சென்னை சென்றபோது மாயமான நாகை மாவட்டத்தை சேர்ந்த மல்லிகா புனேயில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டார். தொடர்ந்து நாகை வந்த அவர் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங்கை சந்தித்து நன்றி தெரிவித்தார்.

அப்போது மூதாட்டி மல்லிகா கூறியதாவது:-

கடவுள் அருளால்...

நாகையில் இருந்து சென்னையில் வசிக்கும் எனது மகன் வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவேன். அதன்படி கடந்த 2014-ம் ஆண்டு நாகையில் இருந்து சென்னை சென்றேன். சென்னையில் இருந்து எனது மகன் வசிக்கும் அம்பத்தூர் செல்வதற்காக உள்ளூர் ரெயிலில் ஏறுவதற்கு பதிலாக புனே செல்லும் ரெயிலில் ஏறிவிட்டேன். புனேயில் மொழி புரியாமல் பல இடங்களில் சுற்றித்திரிந்தேன். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அங்குள்ள ஆசிரமத்தில் சேர்ந்தேன். கடவுள் அருளால் தமிழ்நாட்டை சேர்ந்த ஐ.டி. கம்பெனியில் பணியாற்றும் இளைஞர்கள் சிலர் எங்களுடைய ஆசிரமத்திற்கு வந்து அன்னதானம் செய்தனர். அப்போது அந்த இளைஞர்களிடம் பேசியபோது நான் வழி தவறிய விவரத்தை கூறினேன்.

குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

நான் எனது மகன் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று அந்த இளைஞர்களிடம் கூறியவுடன் அந்த இளைஞர்கள் புனேயில் இருந்து நாகை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் எடுத்த நடவடிக்கையால் புனேயில் இருந்து மீண்டும் இங்கு வந்து சேர்ந்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மூதாட்டி மல்லிகாவை அவருடைய குடும்பத்தினரிடம் போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங் ஒப்படைத்தார். இதனால் அவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்