தாய், தந்தையை கொன்று உடல்களுடன் 2 நாட்கள் வீட்டுக்குள் இருந்த மகன் கைது
கும்பகோணம் அருகே தாய் தந்தையை கொன்று விட்டு உடல்களுடன் 2 நாட்கள் இருந்த மகனை போலீசார் கைது செய்தனர்.
கும்பகோணம் அருகே தாய் தந்தையை கொன்று விட்டு உடல்களுடன் 2 நாட்கள் இருந்த மகனை போலீசார் கைது செய்தனர்.
இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
திருமணம் ஆகாதவர்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் போலீஸ் சரகம் தில்லையம்பூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ்(வயது 80). விவசாயி. இவரது மனைவி லட்சுமி(73). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள்.
மூத்த மகன் ரவிச்சந்திரன் மின்சாரத்துறையில் வேலை பார்த்து வந்தார். ஒரு வாகன விபத்தில் அவர் இறந்து விட்டார். மகள் கீதாவுக்கும் திருமணம் ஆன நிைலயில் அவரும் இறந்து விட்டார். பட்டதாரியான இளைய மகன் ராஜேந்திரன்(55) மட்டும் திருமணம் செய்து கொள்ளாமல் தாய், தந்தையுடன் வசித்து வருகிறார்.
மகனை விட்டு செல்ல மனமில்லாமல்...
திருமணம் ஆகாத மன உளைச்சலில் இருந்த ராஜேந்திரனுக்கு சற்று மனநிலை பாதித்துள்ளது. இதன் காரணமாக அவர் அடிக்கடி தனது பெற்றோருடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
மனநிலை சரியில்லாத மகனை தனியாக விட்டு, விட்டு கோவிந்தராஜும், அவரது மனைவி லட்சுமியும் உறவினர்கள், நண்பர்கள் வீடு உள்பட எங்கும் வெளியில் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தனர்.
வெட்டிக்கொலை
இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வழக்கம்போல் ராஜேந்திரன் தனது பெற்றோர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது ராஜேந்திரனை அவர்கள் கண்டித்துள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த ராஜேந்திரன் தன்னை பெற்ற தாய், தந்தை என்று பாராமல் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தலை, கழுத்து, கை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெட்டிக்கொன்று உள்ளார்.
2 நாட்கள் உடல்களுடன் இருந்தார்
கொலை செய்த பிறகு ராஜேந்திரன் ஒன்றும் நடக்காததுபோல் வீட்டிலிருந்து பால் வாங்குவது, வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவது, மேலும் கடைக்குச் சென்று காய்கறிகள் வாங்கி சமைத்து சாப்பிடுவது ஆகியவற்றை சாதாரண மனிதர்கள் போல் செய்து வந்துள்ளார்.
மேலும் கொலை நடந்த பின்னர் 2 நாட்களும் காலையில் எழுந்து அருகில் உள்ள ஆற்றில் குளித்து விட்டு வீட்டுக்குள் சென்று கதவை சாத்திக்கொண்டு இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலை வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.
அதிர்ச்சி
அத்துடன் கோவிந்தராஜனையும், அவரது மனைவி லட்சுமியையும் வெளியில் நடமாட்டம் இல்லாததாலும், அவர்கள் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதாலும் சந்தேகம் அடைந்த அக்கம், பக்கத்தினர் இதுகுறித்து பட்டீஸ்வரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன் தலைமையிலான போலீசார் வீட்டுக்கு உள்ளே சென்ற பார்த்தபோது அங்கு கோவிந்தராஜனும், லட்சுமியும் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த தகவல் அக்கம், பக்கத்தினருக்கு தெரிய வரவே கோவிந்தராஜின் வீட்டின் முன்பு திரளான பொதுமக்கள் திரண்டனர். இதனால் அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு போலீஸ் மோப்ப நாய் 'சோழா' வரவழைக்கப்பட்டது.
பிரேத பரிசோதனைக்கு...
அங்கு வந்த மோப்பநாய் சோழா வீட்டில் உட்புறம் வந்து பார்த்து விட்டு வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடிச்சென்று படுத்துக்கொண்டது. மேலும் தடயவியல் துறை உதவி இயக்குனர் ராமச்சந்திரன் தலைமையிலான தடயவியல் நிபுணர்கள் இறந்தவர்களின் உடல்களில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.
பின்னர் இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கைது
இது குறித்து பட்டீஸ்வரம் போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) சிவசெந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.கும்பகோணம் அருகே தாய், தந்தையை பெற்ற மகனே கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.