வடமாநில வாலிபர் வெட்டிக்கொலை

Update: 2023-02-20 16:29 GMT


மனைவியுடன் கள்ளத்தொடர்பில் இருப்பதாக சந்தேகப்பட்டு வடமாநில வாலிபரை வெட்டிக்கொலை செய்த சரக்கு ஆட்டோ டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பீகார் தொழிலாளி

பீகார் மாநிலம், தாத்தோர் பகுதியைச் சேர்ந்தவர் பவன் (வயது 27). இவருக்கு ஒரு வருடத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. பின்னர் தனது மனைவியை சொந்த ஊரில் விட்டு, விட்டு திருப்பூருக்கு வந்தார். திருப்பூர் நெசவாளர் காலனி திருமலைநகரில் ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்தார். மேலும் அப்பகுதியில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை செய்து வந்தார். அவருடன் அவருடைய தம்பி நீரஜ்குமாரும் (19) தங்கியுள்ளார்.

இவர்கள் வாடகைக்கு குடியிருக்கும் வீட்டுக்கு அருகே ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த உபேந்திரா (50) என்பவர் தனது மனைவி சித்ராதேவி (43) மற்றும் 3 மகன்களுடன் குடியிருந்து வருகிறார். உபேந்திரா அப்பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் சரக்கு ஆட்டோ டிரைவராக வேலை செய்து வந்தார்.

வாலிபர் கொலை

உபேந்திரா அடிக்கடி தனது மனைவியை சந்தேகப்பட்டு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு 9 மணி அளவில் பவன் தனது வீட்டில் இருந்தார். அப்போது அங்கு சென்ற உபேந்திரா, தனது மனைவியுடன் பவன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகப்பட்டு அவரை சத்தம் போட்டுள்ளார். இதை பவன் மறுத்துள்ளார்.

இதன் காரணமாக அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த உபேந்திரா தான் கொண்டு சென்ற அரிவாளால் பவனை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் பவனுக்கு தலை, கைகளில் அரிவாள் வெட்டு விழுந்தது.

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் உபேந்திரா அங்கிருந்து தப்பினார். ரத்த வெள்ளத்தில் கிடந்த பவனை மீட்டு 108 ஆம்புலன்சு மூலமாக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பவன் பரிதாபமாக இறந்தார்.

தேடி வருகிறார்கள்

தகவல் அறிந்து திருப்பூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் கொலை வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள ஆட்டோ டிரைவர் உபேந்திராவை தேடி வருகிறார்கள்.

மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகப்பட்டு வாலிபரை வெட்டிக்கொலை செய்த தொழிலாளியால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்