பல்லாங்குழி சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

கிணத்துக்கடவு அருகே பல்லாங்குழி சாலையால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். அதை உடனடியாக சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Update: 2022-08-10 16:16 GMT

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு அருகே பல்லாங்குழி சாலையால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். அதை உடனடியாக சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

பிரதான சாலை

கிணத்துக்கடவில் இருந்து ரெயில் நிலையம் செல்லும் சாலையானது லட்சுமி நகர், கொண்டம்பட்டி, வடசித்தூர், பெரியகளந்தை, மெட்டுவாவி, காட்டம்பட்டி, பல்லடம், திருப்பூர், செஞ்சேரிமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பிரதான சாலையாக உள்ளது. இந்த சாலையில் ஏற்கனவே கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு லட்சுமி நகர் பகுதியில் இருந்து வடசித்தூர் வரை அகலப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்றது.

ஆனால் கிணத்துக்கடவு ரெயில்வே மேம்பாலம் பகுதியில் இருந்து லட்சுமி நகர் வரை சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு உள்ள குண்டும், குழியுமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

சீரமைக்க வேண்டும்

அங்குள்ள குழிகளில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் குழிகள் இருப்பது தெரியாமல் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி விழுந்து காயம் அடையும் நிலை உள்ளது.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

கிணத்துக்கடவில் உள்ள ரெயில் நிலைய சாலை குறிப்பிட்ட தூரத்திற்கு பழுதடைந்து பல்லாங்குழி போல் காட்சியளிக்கிறது. இதுகுறித்து பலமுறை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் சாலையை சீரமைக்க நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. இதனால் தினமும் சிரமம் அடைந்து வருகிறோம். எனவே அந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்