நடிகர் மயில்சாமியின் உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி!

நடிகர் மயில்சாமியின் உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

Update: 2023-02-19 08:48 GMT

சென்னை,

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான மயில்சாமி, இன்று அதிகாலை 3.30 அளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். 57 வயதாகும் மயில்சாமி சிறிய பெரிய வேடங்களில் என சுமார் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவரது திடீர் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சென்னை சாலிகிராமத்தில் வைக்கப்பட்டுள்ள மயில்சாமியின் உடலுக்கு திரையுலகினர், அரசியல் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் மயில்சாமியின் உடலுக்கு நடிகரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:-

மயில்சாமி அண்ணன் மறைவு மிகப்பெரிய அதிர்ச்சி. திரையுலகம் மட்டுமல்ல அத்தனை பேருக்கும் மிகப்பெரிய இழப்பு. நகைச்சுவை நடிகர் என்பதையும் தாண்டி மிக நல்ல மனிதர். அவருடன் நிறைய பணியாற்றியுள்ளேன். மிகப் பாசமாகப் பழகுவார். குடும்பத்தில் ஒருவர் மாதிரி பேசுவார்.

10 நாட்களுக்கு ஒரு முறை தொலைபேசியில் அழைப்பார். ஆனால், ஒரு முறைகூட சொந்த விஷயத்திற்கு உதவி கேட்டதில்லை. பொதுநலனுடன் பேசக்கூடியவர். அப்படிப்பட்ட நல்ல மனிதர். மிகப்பெரிய இழப்பு. கட்சி சார்பு இல்லாமல் பழகுபவர். மிகப்பெரிய சோகத்தை அவரது இழப்பு ஏற்படுத்தியுள்ளது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

பொதுவாக எம்மனசு தங்கம் படத்திலும் நெஞ்சுக்கு நீதி படத்திலும் என்னுடன் நடித்தார். 50 நாட்கள் படப்பிடிப்பு என்றால் 40 நாட்கள் என்னுடன் தான் இருந்தார். எனக்கு அவர் அண்ணன் மாதிரி தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்