சத்யராஜின் தாயார் உடலுக்கு அமைச்சர் சேகர்பாபு நேரில் அஞ்சலி
சத்யராஜின் தாயார் உடலுக்கு அமைச்சர் சேகர்பாபு நேரில் அஞ்சலி
கோவை
கோவையை சேர்ந்தவர் நடிகர் சத்யராஜ். இவருடைய தாயார் நாதாம்பாள். இவர் கோவை ரேஸ்கோர்சில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இவருக்கு வயது முதிர்வு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து இவர்கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை அவர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 94. நாதாம்பாளுக்கு நடிகர் சத்யராஜ் மற்றும் கல்பனா மன்றாடியார், ரூபா சேனாதிபதி ஆகிய இரு மகள்களும் உண்டு.
இந்த நிலையில் நடிகர் சத்யராஜ் தாயார் மறைவுக்கு திரையுலக நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்து உள்ளனர். சத்யராஜின் தாயார் நாதாம்பாள் உடலுக்கு நேற்று காலை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, சத்யராஜ் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இதுபோல் ஆ.ராசா எம்.பி. நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். நாதாம்பாளின் உடல் இன்று (ஞாயிறுக்கிழமை) காலை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள மின்மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.