தீரன் சின்னமலை நினைவு தூணுக்கு அமைச்சர் கே.என்.நேரு மலர் தூவி அஞ்சலி

சங்ககிரியில் தீரன் சின்னமலை நினைவு தூணுக்கு அமைச்சர் கே.என்.நேரு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

Update: 2022-08-03 19:46 GMT

சங்ககிரியில் தீரன் சின்னமலை நினைவு தூணுக்கு அமைச்சர் கே.என்.நேரு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

தீரன் சின்னமலை நினைவு தினம்

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை காங்கேயம் அருகே உள்ள மேலப்பாளையம் என்ற ஊரில் பிறந்தார். இளம் வயதிலேயே பல்வேறு போர் பயிற்சி பெற்ற அவர், இளைஞர் படையை உருவாக்கி அதற்கும் பயிற்சி அளித்தார்.

பின்னர் வீரபாண்டிய கட்டபொம்மன், பூலித்தேவன், மருது சகோதரர்கள், திப்பு சுல்தான் ஆகியோரோடு சேர்ந்து ஆங்கிலேயர்களை எதிர்த்து நாட்டின் சுதந்திரத்திற்காக போரிட்டு பல்வேறு போர்களில் இவர் வெற்றி வாகை சூடினார். ஒரு கட்டத்தில் ஆங்கிலேயர்கள், அவரோடு இருந்தவர்களை வைத்தே அவர் எந்த இடத்தில் இருக்கிறார் என்பதை அறிந்து அவரையும், அவரது சகோதரர்களையும் கைது செய்து கடந்த 1805-ம் ஆண்டு ஜூலை மாதம் 31-ந்தேதி ஆடிப்பெருக்கு தினத்தன்று சங்ககிரி கோட்டையில் வைத்து தூக்கிலிட்டனர். இதைத்தொடர்ந்து தீரன் சின்னமலை நினைவு தினம் ஒவ்வொரு ஆண்டும் அரசு சார்பில் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

சங்ககிரி கோட்டை

அதன்படி இந்த ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்ட இடமான சேலம் மாவட்டம், சங்ககிரி கோட்டையில் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த தீரன் சின்னமலை உருவப்படத்திற்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மலர் வளையம் வைத்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

இதில் கலெக்டர் கார்மேகம், மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ், வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், சின்ராஜ் எம்.பி., முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதி, முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.சிவலிங்கம், போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபினவ், கூடுதல் கலெக்டர் பாலச்சந்தர், உதவி கலெக்டர்கள் மேனகா, சவுமியா, மாநகராட்சி துணை மேயர் சாரதாதேவி, சங்ககிரி பேரூராட்சி தலைவர் மணிமொழி முருகன், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் கணேஷ்ராம், தாசில்தார் பானுமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அலங்காரம்

தீரன் சின்னமலை நினைவை போற்றும் வகையில் சங்ககிரி திருச்செங்கோடு-பள்ளிபாளையம் பிரிவு சாலையில் அமைக்கப்பட்டு இருந்த அவரது நினைவு சின்னம் மற்றும் சங்ககிரி கோட்டை ஆகியவை வண்ண விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்