மிக்ஜம் புயல் : 24 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.1,487 கோடி நிவாரணத் தொகை - தமிழக அரசு தகவல்
நிவாரணம் வழங்கப்பட்டது தொடர்பாக முழுமையான விபரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.;
சென்னை,
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தமிழக அரசு அறிவித்த 6 ஆயிரம் ரூபாய் நிவாரண தொகையை சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் , சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த 24 லட்சத்து 25 ஆயிரத்து 336 குடும்பங்களுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் வீதம் 1,455 கோடியே 20 லட்சம் ரூபாய் நிவாரணம் ஜனவரி மாதமே வழங்கப்பட்டு விட்டது.
நிவாரண உதவி தேவை என பெறப்பட்ட 5 லட்சத்து 28 ஆயிரத்து 933 விண்ணப்பங்களை பரீசிலனை செய்து சுமார் 53 ஆயிரம் குடும்பங்களுக்கு 31 கோடியே 73 லட்சம் ரூபாய் என விடுபட்ட குடும்பங்களுக்கு நிவாரண தொகை என, மொத்தம் 1,487 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது, என்று தெரிவித்தார்.
தொடர்ந்து நிவாரணம் வழங்கப்பட்டது தொடர்பாக முழுமையான விபரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் 17-ம் தேதிக்கு ஐகோர்ட்டு தள்ளிவைத்தது.