மக்காச்சோளத்தில் படைப்புழுவை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.

Update: 2023-09-19 18:47 GMT

மக்காச்சோளம்

அரியலூர் மாவட்டத்தில் மக்காச்சோளம் 18 ஆயிரம் எக்டேரில் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது, மழை பெய்து வருவதால் மானாவாரி பகுதிகளில் மக்காச்சோள விதைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் மக்காச்சோள சாகுபடிக்கு தேவையான தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இப்பயிரை தாக்கக்கூடிய மக்காச்சோள படைப்புழுவினை கட்டுப்படுத்த பரிந்துரைக்கப்பட்ட பூச்சிக்கொல்லிகளை தெளித்து முறையான பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மக்காச்சோள பயிர் அதிக சத்துக்களை எடுக்கும் பயிராகும். மேலும், இப்பயிரினை படைப்புழு என்ற அயல்நாட்டு புழு தாக்குகிறது.

விதைப்பு செய்வதற்கு முன் கடைசி உழவின் போது ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு இட வேண்டும். பின்னர், அடி உரமாக டி.ஏ.பி. ஏக்கருக்கு 2 மூட்டை, ஒரு மூட்டை யூரியா இட வேண்டும். சிறுதானிய நுண்சத்து ஏக்கருக்கு 5 கிலோ மணலுடன் கலந்து விதைப்புக்கு பின்னர் இட வேண்டும். மக்காச்சோளத்தில் துத்தநாக சத்து குறைபாடு காரணமாக வெண்கதிர் அல்லது கதிரில் மணிகள் முழுமையாக உருவாவது தடைபடுகிறது. இதனை சரிசெய்ய ஜிங்க் சல்பேட் ஏக்கருக்கு 15 கிலோ இட வேண்டும்.

மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.

விதைப்பு செய்வதற்கு முன்னர் சயனாட்ரான்லிப்ரோல் 19.8 சதவீதம் மற்றும் தயாமீதாக்ஸம் 19.8 சதவீதம் என்ற விதை நேர்த்தி பூச்சிக்கொல்லியை கிலோவிற்கு 4 மி.லி வீதம் கலந்து 3 மணி நேரம் நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும். 15-20-ம் நாளில் களை எடுத்த பின்னர், யூரியா 1 மூட்டை, 30 கிலோ பொட்டாஷ் கலந்து தூவ வேண்டும். இது போன்று 30-35-ம் நாளில் இரண்டாம் முறை இட வேண்டும். ஏக்கருக்கு 5 இனக்கவர்ச்சி பொறி வைப்பதன் மூலம் படைப்புழுக்களின் நடமாட்டத்தை கண்டறிந்து அதற்கேற்ப பூச்சிக்கொல்லி தெளிக்கலாம். முதல் பூச்சிக்கொல்லி தெளிப்பாக விதைத்த 15 முதல் 25 நாளில் அசாடிரக்டின் 1 சதவீதம் இ.சி. 20 மில்லி அல்லது தயோடிகார்ப் 20 கிராம் அல்லது இமாமெக்டின் பென்சோயேட் 4 கிராம் 10 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

இரண்டாம் கட்ட தெளிப்பாக, விதைத்த 31 முதல் 45-வது நாளில் ஸ்பைனிடோரம் 12 சதவீதம் எஸ்.இ. 5 மில்லி அல்லது மெட்டாரைசியம்-80 கிராம் அல்லது குளோரன் டிரானிலிபுரோல்-4 மில்லி அல்லது புளுபென்டமைட்-4 மில்லி அல்லது நோவாலூரான் 15 மில்லி இவற்றில் ஏதாவது ஒன்றை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து குருத்து பகுதியில் உள் செல்லுமாறு தெளிக்க வேண்டும்.

அரை ஏக்கருக்கும் குறைவாக மக்காச்சோளம் பயிரிட்டுள்ள விவசாயிகள் மேற்கண்ட பூச்சிக்கொல்லியினை 1 லிட்டர் தண்ணீர் பாட்டிலில் கலவையை நிரப்பி மூடியின் மேல் பகுதியில் துளையிட்டு குருத்தில் உள் செல்லுமாறு தெளிக்க வேண்டும். மேற்கண்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி 40 - 45 நாட்களில் படைப்புழுவின் தாக்குதலை கட்டுப்படுத்தி 46-105 நாள் வரை மகசூல் இழப்பு ஏற்படா வண்ணம் தடுத்து எதிர்பார்க்கும் விளைச்சலை பெறலாம். இந்த தகவல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்