பட்டாசு தொழிலை பாதுகாக்கவும், தரத்தை மேம்படுத்தவும் நடவடிக்கை-நாக்பூர் நீரி இயக்குனர் தகவல்

பட்டாசு தொழிலை பாதுகாக்கவும், தரத்தை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என நாக்பூர் நீரி இயக்குனர் கூறினார்.

Update: 2023-03-30 18:45 GMT


பட்டாசு தொழிலை பாதுகாக்கவும், தரத்தை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என நாக்பூர் நீரி இயக்குனர் கூறினார்.

ஆய்வுக்கூடம்

விருதுநகர் அருகே ஏ.ஏ.ஏ. பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் சி.எஸ்.ஐ.ஆர். அமைப்பின் கீழ் இயங்கி வரும் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி கழகம்(நீரி) சார்பில் தற்காலிக பட்டாசு வேதியியல் பொருட்கள் ஆய்வுக்கூட திறப்பு விழா நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். இந்த ஆய்வுக்கூடத்தை நாக்பூர் நீரி இயக்குனர் அதுல் வைத்தியா திறந்து வைத்து பேசியதாவது:-

கடந்த ஜனவரி மாதம் ஆனைக்குட்டம் கிராமத்தில் ரூ.15 கோடி மதிப்பில் பட்டாசு வேதியியல் பொருட்கள் ஆய்வுக்கூடம் அமைக்க பூமி பூஜை போடப்பட்டது. ரூ.15 கோடியில் ரூ.9 கோடி மத்திய அரசு நிதியாகும். மீதமுள்ள ரூ.6 கோடி பட்டாசு உற்பத்தியாளர்கள் வழங்க வேண்டும்.

தற்போது பட்டாசு உற்பத்தியாளர்கள் தங்கள் பங்கிற்கான ரூ.6 கோடியில் ரூ.3 கோடி வழங்கி உள்ளனர். தற்போது அங்கு கட்டிடம் கட்ட வரைபட அனுமதி பெற வேண்டிய நிலை உள்ளது. எனவே பட்டாசு உற்பத்தியாளர்கள் நலன் கருதி இங்கு தற்காலிகமாக பட்டாசு வேதியியல் பொருட்கள் ஆய்வுக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்கூடத்தின் நோக்கம் அரசு நிர்ணயித்த விதிமுறைகளின்படி பட்டாசு தயாரிக்கப்படுகிறது என பரிசோதனை செய்வதே ஆகும். எனவே பட்டாசு தயாரிப்பாளர்கள் பட்டாசின் தரத்தை ஆய்வு செய்ய நாக்பூர் செல்ல வேண்டாம்.

தரம் மேம்பட நடவடிக்கை

விருதுநகர் அருகே அமைக்கப்பட்டுள்ள இந்த ஆய்வுக்கூடத்தை பயன்படுத்தி கொள்ளலாம். பட்டாசில் பயன்படுத்தப்படும் வேதி பொருட்களின் தன்மை, வீரியம், தரம் ஆகியவற்றை இங்கு பரிசோதனை செய்யலாம். பட்டாசின் ஒளி மற்றும் ஒலி அளவை சோதனை செய்து கொள்ளலாம். இந்தியா முழுவதும் பட்டாசு தயாரிப்பு மற்றும் வெடிப்பதை வரைமுறைப்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே பட்டாசு தொழிலை பாதுகாக்கவும், தரத்தை மேம்படுத்தவும் நீரி அமைப்பு செயல்படும். தற்போது தயாரிக்கப்படும் பசுமை பட்டாசுகளில் முன்பு தயாரிக்கப்பட்ட பட்டாசுகளில் உள்ள காற்று மாசினை விட 30 சதவீதம் காற்று மாசு குறைவாகவே இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார். இதைதொடர்ந்து அவர் ஆய்வுக்கூடத்தை பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில் நீரி மூத்த விஞ்ஞானி சாரதா ராயுடு, விஞ்ஞானி சரவணன், பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர் சங்கத் தலைவர் கணேசன் வரவேற்றார்.

Tags:    

மேலும் செய்திகள்