இருக்கன்குடி கோவிலுக்கு வந்த புதுப்பெண் மாயம்
இருக்கன்குடி கோவிலுக்கு வந்த புதுப்பெண் மாயம் ஆனார்.
சிவகாசி,
தென்காசியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 27). இவருக்கும் உமா மகேஸ்வரி (19) என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இந்தநிலையில் தான் வசிக்கும் பகுதியில் உள்ள பக்தர்களுடன் சுரேஷ், உமா மகேஸ்வரி ஆகியோரும் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரை வந்துள்ளனர். கடந்த 1-ந் தேதி தென்காசியில் இருந்து புறப்பட்ட பக்தர்கள் 3-ந் தேதி இருக்கன்குடி வந்து சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அங்கேயே இரவு தூங்கி உள்ளனர். பின்னர் அதிகாலை 4 மணிக்கு தென்காசி செல்ல தயாரான போது புதுப்பெண் உமாமகேஸ்வரியை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சுரேஷ், தனது மனைவி காணாமல் போனது குறித்து இருக்கன்குடி போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் இருக்கன்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.