தர்மபுரியில் இன்று முதல் மாலை நேர உழவர் சந்தை தொடக்கம்

தர்மபுரியில் இன்று முதல் மாலை நேர உழவர் சந்தை தொடக்கம்

Update: 2022-11-13 18:45 GMT

தர்மபுரி மாவட்ட வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் தர்மபுரியில் உள்ள கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினமும் இங்கு சுமார் 40 டன் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது. பண்டிகை காலங்களில் இதன் எண்ணிக்கை அதிகரிக்கும்.

தற்போது உழவர் சந்தையில் மாலை நேர உழவர் சந்தை தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தினமும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை மாலை நேர உழவர் சந்தை செயல்படும். வழக்கமாக காலை நேர உழவர் சந்தைகளில் காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரை வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த மாலை நேர உழவர் சந்தையில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் உற்பத்தி செய்யும் சிறுதானியங்கள், பயிர் வகைகள், பருப்பு வகைகள், எண்ணெய் வகைகள், காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட வேளாண் விற்பனை பொருட்களான தேன், சத்துமாவு, பிஸ்கட்ஸ், தின்பண்டம், ஜாம், சாஸ், கெட்ச்அப் மற்றும் ஊறுகாய் வகைகள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக 20 கடைகளில் இந்த வேளாண் பொருட்கள் வெளி மார்க்கெட்டை விட குறைந்த விலையில் விற்பனை செய்ய தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இன்று (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெறும் விழாவில் கலெக்டர் சாந்தி மாலை நேர உழவர் சந்தையை தொடங்கி வைக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்