கடும் குளிரால் நடுங்க வைத்த மாண்டஸ் புயல்

மாண்டஸ் புயல் எதிரொலியாக கடலூரில் 35 கி.மீ.வேகத்தில் கடல் காற்று வீசியது. மேலும் கடும் குளிரால் நடுங்க வைத்த இந்த புயல் கடலூரில் சாரல் மழையை தந்தது.

Update: 2022-12-09 18:45 GMT

வங்க கடலில் கடந்த 5-ந்தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, கடந்த 2 நாட்களுக்கு பிறகு தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டிருந்தது. பின்னர் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று முன்தினம் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு மாண்டஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து இந்த புயல் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று முன்தினம் இரவு தீவிர புயலாக வலுப் பெற்றது. நேற்று இந்த புயல் வலுவிழந்து வடதமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதியை நெருங்கும் என்றும், நள்ளிரவு மாமல்லபுரம் அருகில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

கடுமையான குளிர்

இதையொட்டி கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மற்றும் மிக கன மழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த எச்சரிக்கை மிக கனமழை பெய்யும் என்பதையும், இதனால் பாதிப்புகள் ஏற்படவாய்ப்பு இருப்பதற்கான எச்சரிக்கை என்பதால், எதற்கும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதை இந்த எச்சரிக்கை உணர்த்துவதாகும்.

ஆனால், இதற்கு நேர் மாறாக நேற்றைய வானிலை கடலூரில் அமைந்திருந்தது. காலை முதல் கடுமையான குளிர் வாட்டி எடுத்தது. இதனால் ஊட்டி போன்ற குளிர்பிரதேசங்களில் இருப்பது போன்ற நிலையை உணர்த்துவதாக அமைந்திருந்தது.

எனவே, கம்பளி, ஸ்வெட்டர் போன்ற உடைகளையும் மக்கள் தேடும் நிலைக்கு ஆளானார்கள். நடுநடுங்க செய்யும் குளிருக்கு இடையே அவ்வப்போது காற்றும், மழையும் பெய்து கொண்டு இருந்தது. இந்த மழையும் சாரலாகவே நீடித்தது.

35 கி.மீ. வேகத்தில் வீசிய காற்று

புயல் எச்சரிக்கை காரணமாக, மக்களும் வீடுகளுக்குள் முடங்கி விட்டனர். இதனால், கடலூர் நகரில் பெரும்பாலான சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதன்காரணமாக, பெரும்பாலான சாலையோர கடைகள் மூடப்பட்டன. ஒரு சில கடைகள் மட்டும் திறந்து இருந்தது. அதிலும் மக்கள் வராததால் வியாபாரம் இல்லை.

மாண்டஸ் புயலால், மழை பொழிவு இல்லாமல் ஏமாற்றிய போதிலும், கடற்கரை பகுதியில் காற்றின் வேகம் அதிகமாகவே இருந்தது. அந்தவகையில், கடலூரில் நேற்று 30 கி.மீ. முதல் 35 கி.மீ. வரை கடல் காற்று வீசியதாக துறைமுக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதன் காரணமாக கடற்கரையோரம் இருந்த தென்னை மரங்கள் காற்றில் சாய்ந்து விழும் அளவுக்கு ஆடின.

கடல் சீற்றம்

மேலும் கடலூரில் கடல் சீற்றமாகவும் இருந்தது. தேவனாம்பட்டினம், தாழங்குடா, சோனாங்குப்பம், சாமியார்பேட்டை உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராம கடற்கரையோரம் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்பட்டன.

1 மீட்டர் தூரம் கடல் அலைகள் சீறி பாய்ந்தன. கடற்கரையோரம் அரிப்பு ஏற்படாமல் தடுக்க போடப்பட்ட கருங்கற்களில், அலைகள் ஆக்ரோஷமாக வந்து மோதியதை பார்க்க முடிந்தது.

இதையொட்டி மீனவர்கள் ஏற்கனவே மீன்பிடிக்க செல்லாமல் படகுகளை கடற்கரையோரம் நிறுத்தி வைத்தனர். அந்த படகுகள் வரை கடல் அலைகள் வந்ததால், அதை டிராக்டர்கள் மூலம் கட்டி தொலைதூரங்களுக்கு இழுத்து சென்றனர்.

புயல் பாதுகாப்பு மையம்

சோனாங்குப்பம் கடற்கரையோரம் மண் அரிப்பு ஏற்பட்டு, தண்ணீர் ஊருக்குள் புகும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து அதில் அப்பகுதி மக்கள் மண் மூட்டைகளை அடுக்கி பாதுகாப்பாக வைத்துள்ளனர்.

இதேபோல் தாழங்குடா பகுதியிலும் கடல் அலைகள் சீற்றத்துடன் இருப்பதால் தண்ணீர் ஊருக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் நேற்று படகுகள் ஏதும் இயக்கப்படாமல், பாதுகாப்பாக கரையில் நிறுத்தி வைக்கப்பட்டது.

இருப்பினும் மீனவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் புயல் பாதுகாப்பு மையங்கள், பல் நோக்கு பாதுகாப்பு மையங்களையும் தயார் நிலையில் அதிகாரிகள் வைத்துள்ளனர்.

மழை அளவு

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிதம்பரத்தில் 14.3 மில்லி மீட்டர் மழை பதிவானது.

மாவட்டத்தில் மற்ற இடங்களில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

அண்ணாமலைநகர்- 12.2., பரங்கிப்பேட்டை-7.6, புவனகிரி-7, லால்பேட்டை- 7, காட்டுமன்னார்கோவில்-6.1, கொத்தவாச்சேரி -6, கடலூர்-4.8, வானமாதேவி -4.4, பண்ருட்டி, சேத்தியாத்தோப்பு, வடக்குத்து தலா -4, கலெக்டர் அலுவலகம்- 3.6, ஸ்ரீமுஷ்ணம் -3.2, விருத்தாசலம்- 2, குறிஞ்சிப்பாடி, கீழசெருவாய், குப்பநத்தம் தலா -1.

Tags:    

மேலும் செய்திகள்