ஸ்ரீபெரும்புதூர் அருகே தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது
ஸ்ரீபெரும்புதூர் அருகே தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார்.
கொலை
காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே உள்ள எச்சூர் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகிப்பவர் குமுதா டோம்னிக். இவருடைய மகன் ஆல்பர்ட். ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய தி.மு.க. இளைஞரணி பொறுப்பாளராக இருந்தார். இவர் எச்சூர் ஊராட்சியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் இரும்பு கழிவுகள் எடுக்கும் பணி, தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் கேன் வினியோகம் செய்வது, தொழிற்சாலை கட்டுமான பணிகளுக்கு தேவையான மண், சிமெண்டு, கம்பி உள்ளிட்ட உபகரணங்கள் விற்பனை செய்வது மற்றும் கட்டுமான பணி ஒப்பந்ததாரராகவும் இருந்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி மாலை சுங்குவார்சத்திரம் அருகே தொழிற்சாலை சிப்காட் சாலையோரத்தில் நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தபோது 2 மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை வீசியது.
தப்பி ஓடிய ஆல்பர்ட்டை துரத்தி துரத்தி முகம் மற்றும் தலை பகுதிகளில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு அங்கிருந்து மர்ம கும்பல் தப்பிச்சென்றது. இதில் ஆல்பர்ட் பரிதாபமாக இறந்தார்.
கைது
காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், துணை போலீஸ் சூப்ரண்டு சந்திரதாசன், இன்ஸ்பெக்டர் சங்கர் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கில் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் கடந்த 7-ந்தேதி இந்த கொலை வழக்கு தொடர்பாக சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த பிரணவ் (வயது 20), தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கத்தை சேர்ந்த ஆறுமுகம் (21), மேற்கு தாம்பரத்தை சேர்ந்த தினேஷ் குமார் (21) ஆகியோர் தாம்பரம் கோர்ட்டில் சரண் அடைந்தனர். இதையடுத்து தனிப்படை போலீசார் எச்சூரை சேர்ந்த காஞ்சீபுரம் மாவட்ட பா.ம.க. நிர்வாகி சுரேஷ் (32) கட்டிட கட்டுமான நிறுவன தொழில் அதிபர் செந்தில்குமார் (48) உள்பட 14 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான தாம்பரம் பகுதியை சேர்ந்த ரவுடி சூர்யா(23), அவரது நண்பர் சந்ேதாஷ்(25) இருவரையும் போலீசார் தேடி வந்தனர். அவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் தாம்பரம் அருகே பதுங்கி இருந்த அவர்கள் இருவரையும் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.