மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, மும்பை, ஐதராபாத், டெல்லி போன்ற நகரங்களுக்கும், இலங்கை, துபாய், சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கும் விமான சேவை உள்ளது. இந்தநிலையில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் மதுரையில் இருந்து சென்னை வழியாக கோவா செல்வதற்கு விமான சேவையை நேற்று தொடங்கியது. அந்த விமானம் மதுரையிலிருந்து மதியம் 12.05 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்று, பின்னர் கோவாவிற்கு மாலை 4 மணிக்கு சென்றடையும். பின்னர் கோவாவில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு சென்னை வந்து, இரவு 8:10 மணிக்கு மதுரை வந்தடையும் என ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும், 10-ந்தேதி முதல் 19-ந் தேதி வரை ஒரு விமானம் ஐதராபாத்திலிருந்து தினமும் காலை 10.35 மணிக்கு புறப்பட்டு, மதுரை விமான நிலையத்திற்கு மதியம் 12.15 மணிக்கு வந்தடையும். பின்னர் அதே விமானம் மதுரையிலிருந்து மதியம் 1.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.25 மணிக்கு கொழும்பு சென்றடையும்.
அதே போல் கொழும்புவில் இருந்து மாலை 3.25 மணிக்கு புறப்பட்டு மாலை 4.35 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடையும். பின்னர் மதுரையில் இருந்து அதே விமானம் மாலை 5.25 மணிக்கு புறப்பட்டு இரவு 7.25 மணிக்கு ஐதராபாத் சென்றடையும் என விமான நிறுவனம் அறிவித்துள்ளது. பயணிகள் ஆதரவை பொறுத்து இந்த சேவை நீடிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.