சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்களின் விடுதியை நீதித்துறைக்கு வழங்கும் முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் - முத்தரசன்

சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்களின் விடுதியை நீதித்துறைக்கு வழங்கும் முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.

Update: 2023-07-15 16:36 GMT

சென்னை,

சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்களின் விடுதியை நீதித்துறைக்கு வழங்கும் முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசுக்கு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின், தமிழ்நாடு மாநில செயற்குழு வேண்டுகோள். சென்னையில் உள்ள, சென்னை மருத்துவக் கல்லூரியில் பயிலும் முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கான, தங்கும் விடுதி, சென்னை பாரிஸ் கார்னர் பேருந்து நிலையம் அருகில் உள்ளது. இந்த விடுதி, சென்னை மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மிக அருகில் உள்ளது.

இதனால், பணிக்குச் செல்லும் முதுநிலை மருத்துவ மாணவர்கள், மருத்துவமனைக்கு ஐந்து நிமிடங்களில் நடந்தே சென்று விட முடியும். இது அம்மாணவர்களுக்கு வசதியாகவும், பாதுகாப்பாகவும் உள்ளது. அவசர காலத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதற்கு, விரைவாகச் செல்வதற்கும் ஏதுவாக உள்ளது.

தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிமுறைகளின் படியும், முதுநிலை மருத்துவ மாணவர்களின் விடுதி, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகிலேயே இருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மாணவர்களுக்கும், நோயாளிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும், அவ்விடுதி உள்ள இடத்தை, நீதித்துறைக்கு வழங்கப் போவதாக செய்திகள் வெளிவருகின்றன. இது மாணவர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, இவ்விடுதி உள்ள இடத்தை, முதுநிலை மருத்துவ மாணவர்கள் மற்றும் நோயாளிகளின் நலன் கருதி, நீதித்துறைக்கு வழங்கும் முடிவை, தமிழ்நாடு அரசு மறுபரிசீலனை செய்திட வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்