சென்னையில் மதுபான பார்கள் அடைப்பு; மதுபிரியர்கள் அதிர்ச்சி

ஒப்பந்த காலம் முடிவடைந்ததால் சென்னையில் உள்ள மதுபான பார்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் மதுபிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2022-09-02 16:05 GMT

தமிழகத்தில் 'டாஸ்மாக்' மதுக்கடைகள் பெரும்பாலும் பார்களுடன் (மது கூடங்கள்) இயங்கி வருகிறது. பார்கள் நடத்துவதற்கு 'டெண்டர்' நடைமுறை மூலம் உரிமம் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, அரக்கோணம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 'டாஸ்மாக்' பார்களின் டெண்டர் காலம் கடந்த 31-ந்தேதியுடன் முடிவடைந்தது.

பார் டெண்டர்

இதையடுத்து புதிய உரிமம் பெறுவதற்கு கடந்த ஆகஸ்டு 2-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று 'டாஸ்மாக்' நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களை சேர்ந்த பார் உரிமையாளர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதில், ஏற்கனவே உரிமம் உள்ளவர்களுக்கு நீட்டித்து தர வேண்டும்' என்று கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்த வழக்கில் பார் டெண்டர் நடைமுறையை மட்டும் தொடரலாம். ஆனால் யாருக்கும் உரிமம் வழங்க கூடாது என்று 'டாஸ்மாக்' நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டு தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் சென்னை உள்பட மாவட்டங்களில் பார் நடத்துவதற்கான ஒப்பந்த காலம் 31-ந்தேதியுடன் முடிந்துவிட்டதால், டாஸ்மாக் நிர்வாகம் மாவட்ட மேலாளர்களுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.. அதில் ஒப்பந்தம் முடிந்த பார்கள் உடனடியாக மூடப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அதன்படி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பார்கள் மூடப்பட்டுள்ளன.

 பார் உரிமையாளர்களின் கோரிக்கை

சென்னை எழும்பூரில் இயங்கி வரும் டாஸ்மாக் மேலாண்மை இயக்குனரிடம் மதுபார்களை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று பார் உரிமையாளர்கள் மனு அளித்தனர்.

இந்த நிலையில் 'டாஸ்மாக்' மேலாண்மை இயக்குனருக்கு, தமிழ்நாடு டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் என்.அன்பரசன் மனு ஒன்றை அனுப்பி உள்ளார். அதில், 'டாஸ்மாக்' பார் டெண்டர் தொடர்பான வழக்கின் வாதங்கள் முடிந்த நிலையில், ஐகோர்ட்டு நீதிபதியின் தீர்ப்பு நிலுவையில் உள்ளது.

தமிழகம் முழுவதும் பழைய பார் உரிமையாளர்களின் காப்பீட்டு தொகை மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் உள்ளது. எனவே நீதிமன்ற தீர்ப்பு வரும் வரையில் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்டாதவாறு மாதந்திர உரிமை தொகையை செலுத்தி பழைய பார் உரிமையாளர்களே தொடர்ந்து நடத்திக் கொள்ள ஆவணம் செய்ய வேண்டும்' என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

 மதுபிரியர்களின் மனக்குமுறல்

'டாஸ்மாக்' பார்கள் மூடப்பட்டுள்ளதால் மதுகடையின் வெளியே மது அருந்தியவர்களை போலீசார் விரட்டினர்(இடம்- எழும்பூர்).

இந்நிலையில் மது பார்கள் மூடப்பட்டது மது பிரியர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மதுபிரியர்களின் மனக்குமுறல்கள் வருமாறு:-

மதுபானத்தை வாங்கி வீட்டில் குடித்தால் மனைவியிடமும், ரோட்டில் குடித்தால் போலீசாரிடமும் அடி வாங்கும் நிலை இருப்பதால் பாதுகாப்பான இடமாக கருதி பாரில் அமர்ந்து மது அருந்தி வந்தோம்.

தற்போது திடீரென்று பார்கள் மூடப்பட்டுள்ளதால், வேறு வழியின்றி 'டாஸ்மாக்' கடை அருகே உள்ள பகுதியை திறந்தவெளி பார் போன்று பயன்படுத்தும் நிர்ப்பந்ததுக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

அவசர போதைக்காக வருபவர்களும், தண்ணீர் பாட்டில் மற்றும் சைடிஸ் பாரில் கூடுதல் விலை என்பதாலும் சிலர் 'டாஸ்மாக்' கடையில் மதுபானம் வாங்கிய கையோடு வெளியில் நின்று சட்டென்று குடித்துவிட்டு சென்றுவிடுவார்கள். தற்போது எங்கள் நிலையும் அதுபோன்று ஆகிவிட்டது என தன் மனக்குமுறல்களை அவர்கள் கூறினார்கள்.

இந்த நிலையில் 'டாஸ்மாக்' கடைகள் முன்பு மது அருந்தியவர்களை போலீசார் விரட்டினர். கடைகள் முன்பு கையில் சைடீசுடன் நின்றுக் கொண்டிருந்த வியாபாரிகளையும் போலீசார் துரத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்