மத்திய அரசை கண்டித்து டெல்லிக்கு சென்று போராடுவோம்-வக்கீல்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பேட்டி
3 சட்டங்களை இந்தியில் பெயர் மாற்றம் செய்த மத்திய அரசை கண்டித்து டெல்லிக்கு சென்று போராடுவோம் என்று தமிழ்நாடு-புதுச்சேரி வக்கீல்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மாரப்பன் தெரிவித்துள்ளார்.
ஆர்ப்பாட்டம்
பெரம்பலூர் வக்கீல்கள் சங்கத்தினர் (பார் அசோசியேஷன்) நேற்று கோர்ட்டு பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் வள்ளுவன் நம்பி தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு-புதுச்சேரி வக்கீல்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மாரப்பன், சட்ட ஆலோசகர் வாசுதேவன் ஆகியோர் கண்டனம் தெரிவித்து பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அச்சங்கத்தை சேர்ந்த வக்கீல்கள் இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் விசாரணை முறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகிய சட்டங்களை இந்தி மொழியில் பெயர் மாற்றம் செய்து நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்ததை கண்டித்தும், அந்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
இந்தி மொழியில் பெயர் மாற்றம்
இதுகுறித்து தமிழ்நாடு-புதுச்சேரி வக்கீல்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மாரப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:- 100 ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறையில் இருந்த நல்ல சட்டங்களான இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் விசாரணை முறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகிய சட்டங்களை இந்தி மொழியில் பெயர் மாற்றம் செய்து மத்திய அரசு கடந்த 11-ந்தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இந்தி மொழியில் பெயர் மாற்றம் செய்யப்பட்ட அந்த சட்டங்களை வக்கீல்களாகிய எங்களாலே படிக்க முடியாத நிலையில் இந்தியாவில் வாழக்கூடிய 130 கோடி மக்களும் எப்படி படிப்பார்கள் என்று மத்திய அரசுக்கு ஒரு கோரிக்கையை வைத்துள்ளோம்.
தமிழகத்தில் இந்தியை மறைமுகமாக மத்திய அரசு திணிப்பதாக பல அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டிய பொழுதிலும், அதனை இன்று நேரடியாகவே எங்கள் வக்கீல்கள் மூலமாக திணிக்க பார்க்கின்றனர். இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இது தொடர்பாக கூட்டமைப்பு நிர்வாகிகள் ஏற்கனவே கடந்த 14-ந்தேதி மத்திய சட்ட மந்திரியை டெல்லியில் நேரடியாக சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தோம். அவர் பரிசீலனை செய்து தகவல் வெளியிடுவதாக கூறினார். இதுநாள் வரை வெளியிடாத காரணத்தினால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம்.
சென்னையில் பேரணி
இந்த ஆர்ப்பாட்டம் வருகிற 31-ந்தேதி வரை தொடர்ந்து நடைபெறும். இதற்கும் மத்திய அரசு செவி சாய்க்காவிட்டால் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வக்கீல்களை ஒன்று திரட்டி சென்னையில் மாபெரும் பேரணியை நடத்தி மத்திய அரசுக்கு எதிர்ப்பை காட்டுவதுடன், டெல்லிக்கும் சென்று போராடுவோம். எந்தவொரு வக்கீல் சங்கத்தையும் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக மத்திய அரசு முடிவு எடுக்கிறது, என்றால் அவர்களது ஆணவப்போக்கை தான் இது காட்டுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.