உலகெங்கும் அன்பு, அமைதி மலரட்டும் - டி.டி.வி. தினகரன் பக்ரீத் வாழ்த்து
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.;
சென்னை,
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள பக்ரீத் பண்டிகை வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:-
தியாகத்தைப் போற்றும் புனிதத் திருநாளை பக்ரீத் பண்டிகையாக உலகெங்கும் கொண்டாடி மகிழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இறைவனுக்கு இணை ஏதுமில்லை எனக்கூறி இறைவனின் விருப்பத்தையே தன் விருப்பமாக கொண்டு வாழ்ந்த இறைத்தூதர் இப்ராஹிம் அவர்களின் தன்னலமற்ற தியாக வாழ்க்கையின் மேன்மையைப் போற்றுவதே இந்த பக்ரீத் திருநாளின் நோக்கமாகும்.
இறைவனின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்த இறைத்தூதரின் புனிதத்தையும், அரும்பெரும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் இந்நாளில் சாதி, மத மற்றும் இன வேறுபாடுகளை களைந்து ஒற்றுமையுடனும், சகோதரத்துவத்துடனும் வாழ நாம் அனைவரும் உறுதியேற்போம்.
இஸ்லாமியப் பெருமக்கள் மகிழ்வோடு கொண்டாடும் இந்த இனிய நாளில் உலகெங்கும் அன்பு, அமைதி, சமாதானம், மனிதநேயம் மற்றும் மத நல்லிணக்கம் மலரட்டும் எனக்கூறி மீண்டும் ஒருமுறை வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.