தென்காசி மாவட்டத்தில் சட்டமன்ற மதிப்பீட்டு குழு ஆய்வு

தமிழக சட்டமன்ற மதிப்பீட்டு குழு தென்காசி மாவட்டத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டது

Update: 2022-07-25 15:51 GMT

தமிழக சட்டமன்ற மதிப்பீட்டு குழு தென்காசி மாவட்டத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டது.

மதிப்பீட்டு குழு ஆய்வு

தமிழக சட்டமன்ற மதிப்பீட்டு குழு நேற்று தென்காசி மாவட்டத்தில் ஆய்வினை நடத்தியது. இந்த குழுவின் தலைவர் டி.ஆர்.பி.ராஜா, உறுப்பினர்களான எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், சதன் திருமலைகுமார், முகமது ஷா நவாஸ், ராஜ்குமார் மற்றும் செயலாளர் ஸ்ரீனிவாசன், தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

வேளாண்மை நலத்துறை சார்பில் 52 பயனாளிகளுக்கு ரூ.8.7 லட்சம் செலவில் நலத்திட்ட உதவிகளும், சங்கரன்கோவில் நகராட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் செயல்படும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ 57.80 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகளும் வழங்கப்பட்டன. தென்காசி யானைப்பாலத்தை புதுப்பிப்பது தொடர்பாக அங்கு ஆய்வு நடைபெற்றது. இதன்பிறகு சட்டமன்ற மதிப்பீட்டு குழு தலைவர் டி.ஆர்.பி.ராஜா கூறியதாவது:-

தங்கும் விடுதி

குற்றாலம் மல்லிகை தங்கும் விடுதி மற்றும் யானைப்பாலம் பகுதியில் மதிப்பீட்டு குழு ஆய்வு மேற்கொண்டது. குற்றாலத்தில் மிகவும் மோசமான நிலையில் உள்ள மல்லிகை தங்கும் விடுதி முழுமையாக அகற்றப்பட்டு புதிதாக விடுதி அமைக்கப்படும். இதனால் சுற்றுலா பயணிகள் பயனடைவார்கள். தென்காசி புறவழிச் சாலை பணி விரைவில் முடிவடைந்து விடும். இந்த மாவட்டத்தில் விவசாயிகள் கூறும்போது, முக்கிய பிரச்சினையாக வனவிலங்குகளால் பயிர்களுக்கு பெருத்த சேதம் ஏற்படுகிறது என்றனர். காட்டு யானைகளை தடுப்பதற்கு புதிதாக தடுப்பு கம்பிகள் அமைக்க ஏற்பாடுகள் நடைபெறுகிறது. டிரோன் கேமரா மூலம் காட்டு யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து அவற்றைக் காட்டுக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இதே போன்று காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

வேளாண்மை அலுவலகத்தில் விவசாயிகளுடன் கலந்துரையாடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கடையநல்லூர் நகராட்சி அலுவலகத்தில் இணையதளம் மூலம் சான்றிதழ் வழங்கும் முறை தொடர்பாக ஆய்வு நடைபெற்றது. உள்ளூர் மக்களின் கோரிக்கை குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது.

கருப்பாநதி அருகில் கலைமான் நகர் பகுதியில் வசிக்கும் பழங்குடியினருக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. மேலும் யானை புகாத வழி மற்றும் சூரிய மின் வேலி இடத்திலும் புளியங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியையும் சங்கரன்கோவில் பஸ் நிலையத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகாரிகள்

இந்த ஆய்வின்போது மாவட்ட வன அலுவலர் டாக்டர் முருகன், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயினுலாப்தீன், திட்ட இயக்குனர் சுரேஷ், நெடுஞ்சாலை துறை கண்காணிப்பாளர் சுப்பிரமணியன், கோட்ட பொறியாளர் ராஜசேகர், நீர்வளத்துறை செயற்பொறியாளர் சிவக்குமார், வேளாண் மற்றும் உழவர் துறை இணை இயக்குனர் தமிழ்மலர், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மாஹின் அபுபக்கர், தோட்டக்கலை துணை இயக்குனர் மாலதி பொன்னுச்சாமி, மகளிர் திட்ட இயக்குனர் குருநாதன், தென்காசி நகரசபை தலைவர் சாதிர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பழங்குடியின மக்களுடன் கலந்துரையாடல்

சட்டமன்ற மதிப்பீட்டு குழுவினர் கருப்பாநதி அணைப்பகுதியில் கலைமான்நகரில் வசித்து வரும் பழங்குடியின மக்களை சந்தித்து உரையாடினர். அப்போது, அங்கு வசித்து வருபவர்கள் தங்கள் தொழில் சார்ந்தும், குழந்தைகளின் கல்வி சார்ந்தும் பல கோரிக்கைகளை தெரிவித்தனர். தொடர்ந்து யானை புகாவழி மற்றும் சூரியசக்தி மின்வேலி அமைப்பது குறித்தும் வனத்துறையினரிடம் கேட்டறிந்தனர்.

அப்போது தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் செல்லத்துரை, கடையநல்லூரில் அரசு கலைக்கல்லூரி அருகில் உள்ள இடத்தில் வேளாண் கல்லூரி மற்றும் சட்டக்கல்லூரி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை மனுவை அளித்தார்.

மேலும் கடையநல்லூர் நகரமன்ற தலைவர் ஹபிபூர் ரஹ்மான் கடையநல்லூரில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

இதில் ஆணையர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்