வால்பாறை-சாலக்குடி சாலையில் மண் சரிவு
கனமழை காரணமாக வால்பாறை-சாலக்குடி சாலையில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்தப்படி பெய்யவில்லை. ஆனால் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கி வருகிறது. குறிப்பாக கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டவங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி கோவை மாவட்டம் வால்பாறையில் நேற்று முன்தினம் மாலை வரை வெயில் அடித்தது. பின்னர் மாலை 4 மணி அளவில் வானில் கருமேகங்கள் சூழ்ந்தன. இதையடுத்து லேசான மழையாக தொடங்கி சிறிது நேரத்தில் கனமழையாக வெளுத்து வாங்கியது. இதேபோல் தமிழக- கேரள வனப்பகுதியையொட்டி உள்ள சாலக்குடி பகுதியிலும் கனமழை பெய்தது. சுமார் 3 மணி நேரம் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக சோலையாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து ஒரே நாளில் சோலையாறு அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 98 அடியை எட்டியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலும் கன மழை காரணமாக சோலையாறு அணை பகுதியில் இருந்து கேரள மாநிலம் சாலக்குடி செல்லும் சாலையில் அம்பலப்பாறை என்ற இடத்தில் சாலையில் உடைப்பு ஏற்பட்டு மண் சரிவு ஏற்பட்டது. இதனால் சாலை பழுதடைந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் திருச்சூர் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் மாவட்ட நிர்வாகம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சாலக்குடி-வால்பாறை சாலையில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாகவும், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு நலன் கருதியும், நேற்று அதிகாலை முதல் வால்பாறை பகுதியில் இருந்து சாலக்குடி செல்லும் தனியார் வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள் செல்வதற்கு மறு உத்தரவு வரும் வரை தடை விதிக்கப்பட்டது. கேரள மாநில அரசு போக்குவரத்து கழக பஸ்கள் மற்றும் மளுக்கப்பாறை பகுதியில் இருந்து சாலக்குடி செல்லும் வழியில் உள்ள பொது மக்கள், மலைவாழ் கிராம மக்கள் அவசிய தேவைகளுக்கு மட்டும் சென்று வருவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மண் சரிவு ஏற்பட்டுள்ள சாலையில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. தொடர்ந்து வனத்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.