நில அளவை அலுவலர்கள் உண்ணாவிரதம்
நில அளவை அலுவலர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.
நில அளவையர் முதல் கூடுதல் இயக்குனர் வரை உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் சங்கத்தினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக நேற்று சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய 4 இடங்களில் மண்டல அளவில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. திருச்சியில் கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்துக்கு மாநில தலைவர் ராஜா தலைமை தாங்கினார். துணை தலைவர் அப்பாஸ் வரவேற்றார். திருச்சி மாவட்ட தலைவர் வேம்புராஜ் உள்பட திருச்சி மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்ட தலைவர்கள் முன்னிலை வகித்தனர்.
வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில பொருளாளர் சோமசுந்தரம் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்து பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க திருச்சி மாவட்ட தலைவர் பால்பாண்டி உள்பட பல்வேறு சங்கங்களை சேர்ந்தவர்கள் வாழ்த்தி பேசினார்கள். நில அளவை அலுவலர்கள் சங்க மாநில துணைத்தலைவர் தர்மராஜ் கோரிக்கைகளை விளக்கி பேசினார். முன்னாள் மாநில தலைவர் காயாம்பு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். முடிவில் திருச்சி மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் திருச்சி, புதுக்கோட்டை, கரூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நில அளவை அலுவலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.