தேவூர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலி-குமாரபாளையம் பகுதியை சேர்ந்தவர்

தேவூர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி குமாரபாளையம் பகுதியை சேர்ந்த தொழிலாளி பலியானார்.

Update: 2022-12-24 22:14 GMT

தேவூர்:

தொழிலாளி

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை அடுத்த சாணார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி (வயது 26), சாயப்பட்டறை தொழிலாளி. இவர் தனது நண்பர்களான மற்றொரு கார்த்தி மற்றும் சுரேஷ் ஆகியோருடன் காவிரி ஆற்றில் குளிப்பதற்காக சேலம் மாவட்டம் தேவூர் அருகே வேலாத்தாகோவில் பகுதியிலுள்ள நீர் மின் தேக்க கதவணை பகுதிக்கு வந்தனர்.

பின்னர் காவிரி ஆற்றின் அழகை ரசித்த கார்த்தி, தனக்கு நீச்சல் தெரியும் என்று கூறிக்கொண்டு ஆழமான பகுதிக்கு சென்றார். அப்போது தண்ணீரில் கார்த்தி மூழ்கினார்.

பலி

இதைப்பார்த்த அவரது நண்பர்கள் கார்த்தியை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதனால் அவர்கள் சத்தம் போட்டு அக்கம்பக்கத்தினரை அழைத்தனர். அவர்கள் வருவதற்குள் கார்த்தி தண்ணீரில் மூழ்கி பலியானார்.

இதையடுத்து கதவணை அலுவலரிடம் கூறி தண்ணீர் வெளியேற்றுவது நிறுத்தப்பட்டு, மீனவர்கள் உதவியுடன் கார்த்தியின் உடலை தேடினார்கள். சுமார் 2 மணி நேர தேடுதலுக்கு பிறகு கார்த்தியின் உடல் மீட்கப்பட்டது.

வழக்கு

இது குறித்து தகவல் அறிந்து வந்த தேவூர் போலீசார் கார்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ெதாடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உயிரிழந்த கார்த்தியுடன் வந்த நண்பர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்