காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
கல்லக்குடி:
புள்ளம்பாடி ஒன்றியம், சரடமங்கலம் கிராமத்தில் உள்ள காளியம்மன், மகா கணபதி, மூப்பனார், ஊர் சுத்தி கருப்பு மற்றும் பரிவார தெய்வங்களுக்கு நேற்று காலை 9 மணிக்கு மேல் 10.40 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக நேற்று முன்தினம் காலை அனுஞ்கை, விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாஜனம், கணபதி ஹோமம், வேதபாராயணம், முதல் கால யாக பூஜை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து காவிரி ஆற்றில் இருந்து திருமஞ்சனம் கொண்டு வருதல் நிகழ்ச்சியும், முளைப்பாரி தட்டு எடுத்தலும் நடைபெற்றது. மாலையில் அங்குரார்ப்பனம், ரக்ஷாபந்தனம், கும்ப அலங்காரம், வாஸ்துசாந்தியுடன் இரண்டாம் கால யாக பூஜையும், பின்னர் யந்திரஸ்தாபனமும் நடைபெற்றது.
நேற்று காலை மங்கள இசையுடன், கோ பூஜை, நாடிசந்தனம் செய்து யாத்ரா தானம் நடைபெற்றது. பின்னர் மூப்பனார், ஊர் சுத்திகருப்பு கோவில்களுக்கு கடம் புறப்பாடு நடைபெற்று விமான கலசங்களுக்கும், அதைத்தொடர்ந்து காளியம்மன் கோவில் விமான கலசத்திற்கும், பின்னர் கோவிலில் மூலவர் சிலைகளுக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. கும்பாபிஷேகம் புரோகித சிரோன்மணி மகாதேவன் தலைமையில் நடைபெற்றது.
விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் ராஜமாணிக்கம், துணைத்தலைவர் தங்கபொண்ணுசெல்வம், முன்னாள் ஊராட்சி தலைவர் இருவாங்குட்டி மற்றும் கிராம முக்கிய பிரமுகர்கள், சுற்றுவட்டார கிராமங்களான மால்வாய், மேலரசூர், அலுந்தலைப்பூர், கருடமங்கலம், வரகுப்பை, நம்புகுறிச்சி, எம்.கண்ணனூர், ஒரத்தூர், சாத்தப்பாடி, கல்லகம், அணைப்பாடி, அயனாவரம், கொளக்காநத்தம் உள்ளிட்ட பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம காரியஸ்தர்கள் சந்திரஹாசன், பழனியாண்டி, முருகேசன், ராமலிங்கம், தர்மராஜ் மற்றும் இளைஞர்கள், சிங்கப்பூர் நண்பர்கள், மகளிர் சுயஉதவி குழுவினர், பொதுமக்கள் செய்திருந்தனர். ஆங்காங்கே பக்தர்களுக்கு அன்னதானம், நீர்மோர் வழங்கப்பட்டது.