விபத்தில் பெண் பலியான வழக்கில் கொத்தனாருக்கு ஒரு ஆண்டு சிறை
விபத்தில் பெண் பலியான வழக்கில் கொத்தனாருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
திருச்சி ஏர்போர்ட் காமராஜ் நகர் சேரன் நகரை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 33). கொத்தனாரான இவர் கடந்த 2018-ம் ஆண்டு தனது மோட்டார் சைக்கிளில் தனது உறவினரும், கட்டிட தொழிலாளியுமான மீனாட்சியுடன்(23) டி.வி.எஸ். டோல்கேட்டில் இருந்து ஏர்போர்ட் செல்லும் சாலையில் சென்றார். அப்போது புதுக்கோட்டை சாலையில் இருந்து கோழிப்பண்ணை சாலைக்கு பிரியும் இடத்தில் நின்ற சரக்கு வாகனத்தின் மீது ேமாட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மீனாட்சி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சரக்கு வாகன டிரைவர் புதுக்கோட்டை மாவட்டம், நெடுங்குளாங்குடியை சேர்ந்தவர் பழனி(29) கொடுத்த புகாரின் பேரில் தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் மோட்டார் சைக்கிளை அதிவேகமாக ஓட்டி சென்று விபத்தை ஏற்படுத்திய ஈஸ்வரனுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ரூ.11 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் 2 மாத சிறை தண்டனையும் விதித்து நீதிபதி மீனா சந்திரா உத்தரவிட்டார்.