கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஏப்ரல் 28-ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஏப்ரல் 28-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Update: 2023-03-21 06:56 GMT



ஊட்டி,

முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் நீலகிரி மாவட்டம், கோடநாட்டில் உள்ளது. அங்கு கடந்த 2017-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 24-ந் தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இதில், கோடநாடு எஸ்டேட்டின் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக கோத்தகிரி போலீசார் சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமார், ஜித்தின் ஜாய், ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, குட்டி என்ற பிஜின் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய டிரைவர் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்த வழக்கு விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. தற்போது கோடநாடு கொலை கொள்ளை வழக்கை சி.பி.சி. ஐ.டி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை இன்று ஊட்டி கோர்ட்டில் வந்தது. அப்போது வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள வாளையார் மனோஜ், சயான் உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

தொலைத்தொடர்பு தகவல்களை ஆராய்ந்து வருவதால் அரசு சார்பில் கால அவகாசம் வழங்க நீதிமன்றத்தில் கோரப்பட்டது. வழக்கில் இதுவரை நடைபெற்ற விசாரணை குறித்த தகவல்கள் அரசு சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணையை ஏப்ரல் 28ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்