வாலிபரை கடத்தி தாக்குதல்; 2 பேருக்கு கத்திக்குத்து

கார் அடமானம் வைத்ததில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக வாலிபரை காரில் கடத்தி தாக்கினர். இதனை தடுக்க முயன்ற அவரது சகோதரர் உள்பட 2 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதில் சம்பந்தப்பட்ட 9 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-02-05 18:45 GMT

காரில் கடத்தல்

பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தைச் சேர்ந்தவர் ராஜாகான் மகன் மைதீன்கான்(வயது 35). இவர், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வைரவபுரத்தைச் சேர்ந்த நாசர் முகமது மகன் ஆஷிக்(27) என்பவரின் காரை ரூ.2 லட்சத்திற்கு அடமானம் பெற்றுள்ளார். இந்த நிலையில் அந்த காரை பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் அருகே உள்ள பெரியம்மாபாளையத்தைச் சேர்ந்த அலிபாய் என்பவரிடம், மைதீன் கான் கொடுத்துள்ளார். இந்த நிலையில் ஆஷிக் தனது காரை கேட்டும் கொடுக்காததால் அவருக்கும், மைதீன் கானுக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது.

இந்தநிலையில் நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் ஆஷிக் தனது ஆதரவாளர்கள் 8 பேருடன் சேர்ந்து ஒரு காரில் வந்து மைதீன் கானை கடத்தி சென்றார். அப்போது அவர்களை தடுக்க முயன்ற மைதீன் கானின் அண்ணன் வாலிகண்டபுரம் மேட்டுப்பாளையம் ரோடு கடைவீதி தெருவை சேர்ந்த சித்திக்கான் மற்றும் உப்போடையைச் சேர்ந்த நிஷாந்த்(19) ஆகிய 2 பேருக்கும் கத்திக்குத்து விழுந்தது.

கத்திக்குத்து

இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நிஷாந்த் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையடுத்து அலிபாய்க்கு பணம் தருவதாகவும், காரை எடுத்து வருமாறும் மைதீன்கான் மூலம் செல்போனில் பேசி காரை எடுத்து வர வைத்தனர். பின்னர் மைதீன் கானை இறக்கி விட்டு காரை எடுத்துச்சென்று விட்டனர். இந்த நிலையில் ஆஷிக் மற்றும் உடன் இருந்தவர்கள் தாக்கியதில் மைதீன் கானுக்கு முகத்தில் வீக்கம் ஏற்பட்டதுடன் இடது கையில் கத்திக்குத்தும் விழுந்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் காயம் அடைந்த மைதீன் கானை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்