பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் ஆபத்தை விலை கொடுத்து வாங்கும் மாணவர்கள்; பேராசிரியர், பொதுமக்கள் வேதனை

பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் ஆபத்தை விலை கொடுத்து வாங்கும் மாணவர்கள்; பேராசிரியர், பொதுமக்கள் வேதனை

Update: 2023-02-24 21:29 GMT

படியில் பயணம், நொடியில் மரணம் என்ற வாசகம் பஸ்களில் இடம் பெற்று இருக்கும். ஏதோ கடமைக்கு எழுதப்பட்ட வாசகம் அல்ல அது. எச்சரிக்கை விடுக்கும் அந்த வாசகத்தை, இளைஞர்கள் எளிதாக எடுத்துக்கொள்வதுதான் வேதனையாக இருக்கிறது. இளம் கன்றுகள் பயம் அறியாது என்பது என்னவோ உண்மைதான். அதிலும் படித்தவர்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதைபொருட்படுத்தாமல் விளையாட்டு பிள்ளைகளாக நடந்துகொள்வதுதான் வேதனையிலும் வேதனை.

படிக்கட்டில்...

ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை படிக்கட்டில் பயணம் என்பது அன்றாடம் பார்க்கின்ற காட்சியாகவே இருக்கிறது. ஈரோட்டில் இருந்து பெருந்துறை ரோடு, சென்னிமலை ரோடு, பூந்துறை ரோடு, காவிரி ரோடு, பவானி ரோடு, சத்தி ரோடு என்று அனைத்து முக்கிய ரோடுகளிலும் காலை மற்றும் மாலை நேரங்களில் செல்லும் பஸ்கள் பெரும்பாலும், அதாவது டவுன் பஸ்களின் படிக்கட்டுகளில் பயணிக்கும் மாணவர்களை பார்க்கலாம். பெருந்துறை ரோடு, சென்னிமலை ரோட்டில் படிக்கட்டில் மாணவிகளும் தொங்கிக்கொண்டு செல்லும் நிலை உள்ளது.

தனியார் கல்லூரிகள், தனியார் பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ-மாணவிகள் பெரும்பாலும் அந்தந்த நிறுவனத்தின் வாகனங்களில் சென்று வருகிறார்கள். அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகள், உதவி பெறும் கல்லூரிகளின் மாணவ-மாணவிகள் அரசு பஸ்களை நம்பி வருகிறார்கள்.

மேலும் காலை நேரத்தில் வேலைக்கு செல்பவர்கள், அலுவலகம் செல்பவர்கள் என்று அனைத்து தரப்பினரும் ஒரே நேரத்தில் பஸ்களை பிடிக்கும் அவசரத்தில் இருப்பதால் பரபரப்பாக புறப்படுவதும், கிடைக்கும் பஸ்சில் ஏறுவதும் வாடிக்கையாகவே இருக்கிறது. அலுவலகத்துக்கு சரியான நேரத்துக்கு செல்ல வேண்டும். வேலைக்கு குறிப்பிட்ட நேரத்தில் இருக்க வேண்டும் என்பதுபோல, கல்லூரிக்கு சரியான நேரத்தில் செல்ல வேண்டும் என்பதால் கூட்ட நெரிசலைப்பற்றி கவலைப்படாமல் படிக்கட்டிலேயே நின்று கொண்டு பயணிக்கும் அவலம் உள்ளது.

பொதுவாக ஒரு பஸ்சில் எத்தனை பேர் ஏற வேண்டும் என்று பஸ்சின் முன்பக்கம் எழுதி வைத்து இருப்பார்கள். 52 பேர்செல்ல வேண்டிய பஸ்சில் 110-க்கும் மேற்பட்டவர்கள் செல்வது சகஜமாக உள்ளது.

பணிச்சுமை

இலவச பயண டிக்கெட் என்பதால் கண்டக்டர்கள் கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு ஒருபுறம் இருக்கிறது. அதே நேரம் பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்து ஏதேனும் ஒரு நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றாவிட்டாலும் எங்கள் மீது புகார் கூறுகிறார்கள். இதனால் நாங்கள் அனைத்து நிறுத்தங்களிலும் நிறுத்தி விடுகிறோம் என அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

ஈரோடு மாவட்டத்தில் 13 பணிமனைகள் இருக்கின்றன. சுமார் 900 பஸ்கள் ஓடுகின்றன. இங்கு ஒரு டிரைவரோ, கண்டக்டரோ விடுமுறை எடுக்க முடியாத அளவுக்கு கடும் பணிச்சுமை உள்ளது. பஸ் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு வரும் இளைஞர்கள், இளம்பெண்களை பார்க்கும்போது மனதுக்கு கஷ்டமாக இருக்கும். அவர்களிடம் அக்கறையில் ஏதாவது சொன்னால் கூட எங்களுக்கு எதிராக இருக்கிறார்கள்.

பல மாவட்டங்களை ஒப்பிடுகிறபோது ஈரோடு மாவட்டத்தில் படிக்கட்டு பயணத்தை மாணவ-மாணவிகள் விரும்பியோ, திட்டமிட்டோ செய்வது இல்லை. ஆண்டுக்கு ஒரு நாள் பஸ் டே கொண்டாட்டம் சில வழித்தடங்களில் உள்ளது. அன்றைய தினம் உற்சாகமாக இருப்பார்கள். அதுவும் அனுமதிக்கப்பட்ட கொண்டாட்டத்தை தாண்டி வரைமுறை தாண்டுவது இல்லை. அந்த வகையில் மாணவர்களை பார்த்தால் எங்களுக்கும் உற்சாகம்தான் என்றும் டிரைவர்-கண்டக்டர்கள் கூறுகிறார்கள்.

சில மாணவர்கள், படிக்கட்டில் நின்று சேட்டைகள் செய்வதை யாரும் ரசிக்க முடியாது. இது கல்லூரி காலத்து ஒரு வகை ஹீரோயிசமாக மாறிவிட்டது. இதனை மாற்ற வேண்டியது கல்லூரிகளும், பேராசிரியர்களும்தான் என்று ஒரு தரப்பு கூறினாலும், பஸ்கள் அதிகப்படுத்தப்பட வேண்டியது அவசியம் என்ற கோரிக்கையும் உள்ளது.

இருதயராஜ்

இதுபற்றி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்ற கண்டக்டர் ஆர்.இருதயராஜ் கூறியதாவது:-

நான் கண்டக்டராக இருந்தபோது பல்வேறு கிராமங்கள் வழியாக சென்று மெயின் ரோடுகள் வழியாக பஸ் நிலையம் வரும் பஸ்சில் பணியாற்றினேன். பொதுவாகவே காலை நேரங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். கிராமங்களில் உள்ள மக்களுக்கு அடிக்கடி பஸ்கள் கிடைக்காது என்பதால் அங்கு யார் வந்தாலும் ஏற்றிக்கொள்வோம். அப்படி ஏற்றினாலே 110-க்கும் மேற்பட்டவர்கள் வந்து விடுவார்கள். அதற்கு மேல் பயணிகள் ஏறினால் பஸ்சுக்குள் இடம் இருக்காது. படிக்கட்டில் பயணிக்க வேண்டிய நிலைதான் வரும். எனவே மெயின் ரோடு வந்து விட்டால், இடம் இருந்தால் மட்டுமே பஸ்சை நிறுத்துவோம். ஆனால் பள்ளிக்கூடம், கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் நின்றால் கண்டிப்பாக நிறுத்தி விடுவோம். அப்போது பெண்களுக்கு இலவசம் கிடையாது. எனவே அவர்கள் டவுன் பஸ் மட்டுமின்றி எல்லா பஸ்களிலும் ஏறிச்சென்றார்கள். அதுமட்டுமின்றி நாங்கள் பஸ்சை நிறுத்தி பயணிகளிடம் கூட்டம் அதிகமாக இருக்கிறது. யாராவது இறங்கினால் ஏறிக்கொள்ளலாம் என்று பொறுமையாக கூறுவோம். அதையும் மீறி யாராவது ஏறினாலும் படிக்கட்டில் நிற்க அனுமதிப்பதில்லை. இதை கட்டாயமாக வைத்திருந்ததால் எங்கள் வழித்தடத்தில் உள்ள பயணிகள் எங்கள் பஸ் நெரிசலாக இருந்தால் ஏற மாட்டார்கள். படிக்கட்டு பயணமும் இருக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

பொன் நாராயணன்

வீரப்பன்சத்திரம் வியாபாரிகள் சங்க தலைவர் பொன் நாராயணன் கூறியதாவது:-

மாணவர்கள், இளைஞர்கள் படிக்கட்டில் பயணம் செய்வது ஒருவகை ஹிரோயிச மனநிலைதான். பஸ்சுக்குள் இடம் இருந்தாலும் சிலர் படிக்கட்டில் தொங்கிக்கொண்டுதான் வருவார்கள். இப்படி படிக்கட்டில் வருபவர்கள் வேறு வாகனங்கள் உரசி தவறி விழுந்து உயிரை மாய்க்கும் நிலை பரிதாபத்துக்கு உரியது. பஸ்சில் படிக்கட்டுகளில் தொங்குபவர்களை உள்ளே செல்ல சொல்லும் கண்டக்டர்களுக்கு மிரட்டல்களும் வரும். இதை தடுக்க அனைத்து பஸ்களிலும் தானியங்கி கதவுகள் பொருத்த வேண்டும். இதன் மூலம் யாராக இருந்தாலும் படிக்கட்டில் தொங்க வேண்டிய நிலை ஏற்படாது. தவறை செய்யாதே என்று கூறுவதை விட தவறு செய்வதற்கான வாய்ப்பு வழங்காமல் இருப்பதே சிறந்தது. எனவே அரசு இதுபற்றி சிந்திக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேராசிரியர் கமலக்கண்ணன்

சிக்கய்ய நாயக்கர் கல்லூரி பேராசிரியர் கமலக்கண்ணன் கூறியதாவது:-

பஸ் படிக்கட்டில் பயணம் செய்யக்கூடாது என்பது பொதுவான விதியாக உள்ளது. அப்படி பொது விதியை மீறுவது குற்றம். இது குறித்து எங்கள் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு நாங்கள் அறிவுரை வழங்குகிறோம். இதை கேட்டு நல்ல முறையில் பயணம் செய்யும் மாணவர்கள் இருக்கிறார்கள். சிலர் சேட்டை செய்வார்கள். அவர்களை சட்டப்படி திருத்த தேவையான நடவடிக்கைகளை அரசும் எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சுடர் நடராஜ்

மலைப்பகுதிகளில் கல்விப்பணி மேற்கொண்டு வரும் சுடர் தொண்டு நிறுவன இயக்குனர் சுடர் நடராஜ் கூறியதாவது:-

படிக்கட்டு பயணம் சிலருக்கு விளையாட்டு, சிலருக்கு அத்தியாவசியம். விளையாட்டாக படிக்கட்டில் பயணம் செய்பவர்களுக்கு காவல்துறை மூலம் அறிவுரைகள் வழங்க வேண்டும். அத்தியாவசித்துக்காக பயணம் செய்பவர்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுவாக பள்ளி, கல்லூரிகள் அதிகம் இருக்கும் சாலை பகுதிகளில்தான் படிக்கட்டு பயணம் அதிகமாக இருக்கிறது. ஈரோடு, கோபி, சத்தியமங்கலம் என்று எங்கு பார்த்தாலும் இந்த நிலை இருக்கிறது.

சத்தியமங்கலம் அரசு கலைக்கல்லூரி பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு படிக்கும் மாணவ-மாணவிகள் 500-க்கும் மேற்பட்டவர்கள் பக்கத்து கிராமங்களில் இருந்து பல்வேறு பஸ்களிலும் பயணம் செய்து பஸ் நிலையத்தில் இருந்து கல்லூரி செல்கிறார்கள். சுமார் 500 மாணவ-மாணவிகள் செல்வதற்கு கல்லூரி நேரத்தில் 2 பஸ்கள் மட்டுமே உள்ளன. வகுப்புக்கு சரியான நேரத்துக்கு செல்ல வேண்டும் என்று மாணவ-மாணவிகள் நெருக்கியடித்துக்கொண்டு ஏறுகிறார்கள். அப்படிப்பட்ட சூழலில் மாணவ- மாணவிகள் படிக்கட்டில் தொங்குகிறார்கள். இதனால் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். இது தேவையின் நிமித்தமான படிக்கட்டு பயணம். இதை தடுக்க, கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும். 3 கிலோ மீட்டர் தொலைவு மட்டுமே கல்லூரிக்கும் பஸ் நிலையத்துக்கும் இருப்பதால் காலை மற்றும் மாலை நேரங்களில், பஸ் நிலையத்தில் காத்து நிற்கும் பஸ்களை சிறப்பு பஸ்களாக மாணவ-மாணவிகளுக்கு மட்டும் இயக்கலாம். அதன் மூலம் படிக்கட்டு பயணத்தை தவிர்க்கலாம். இதுபோல் பஸ் நிலையங்களில் இருந்து அருகில் உள்ள கல்லூரிகளுக்கு சிறப்பு பஸ்கள், காலையிலும், மாலையிலும் இயக்கப்பட வேண்டும்.

இதுபோல் மகளிருக்கு இலவசம் என்று தமிழக அரசு பஸ்களை இயக்கி வருகிறது. காலை மற்றும் மாலை நேரங்களில் அதிகமாக பெண்கள் பயணிக்கும் வழித்தடங்களில் மகளிர் சிறப்பு இலவச பஸ்களை இயக்குவதன் மூலம் பிற பயணிகள் சிரமமின்றி பயணிக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்