போக்குவரத்து விதி மீறல் அபராத தொகை குறைக்கப்படுமா?- எதிர்பார்ப்பு
போக்குவரத்து விதி மீறல் அபராத தொகை குறைக்கப்படுமா?- எதிர்பார்ப்பு
போக்குவரத்து விதிமுறை மீறலுக்கான அபராத தொகை குறைக்கப்படுமா? என்று வாகன ஓட்டுனர்கள் எதிர்பார்ப்பில் உள்ளார்கள்.
விதி மீறல்
தமிழ்நாட்டில் போக்குவரத்து விதிமீறலை தடுக்கும் வகையில் அபராத தொகையை உயர்த்தி தமிழ்நாடு அரசின் போக்குவரத்து ஆணையாளர் அரசுக்கு பரிந்துரை செய்து இருந்தார். அதன்பேரில் தமிழகம் முழுவதும் போக்குவரத்து விதிமுறை மீறலுக்கு புதிய உயர்த்தப்பட்ட அபராத வசூல் உடனடியாக அமலுக்கு வந்தது.
விழிப்புணர்வு
இது குறித்து ஈரோடு சாஸ்திரி நகர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் ஏ.ஜாய் மரிய ரூபர்ட் கூறியதாவது:-
போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கு அபராதம் விதிப்பது என்பது சரியான நடவடிக்கைதான். ஆனால், பெரும்பாலும் ஏழைகள், கல்வி அறிவு இல்லாதவர்கள் இந்த விதிமுறை மீறல்களில் சிக்கிக்கொள்கிறார்கள். அவர்களுக்கு மிக அதிக தொகை விதிக்கப்படுவது சரியில்லை. எச்சரிக்கும் விதமாக குறைந்த கட்டணம் அபராதம் விதிக்கலாம். தொடர்ந்து அதுபோன்ற விதிமுறை மீறலில் அவர் சிக்கினால் அபராத தொகையை உயர்த்தலாம். சட்டத்தை சரியாக வாகன ஓட்டிகள் பின்பற்றுவதற்காக விழிப்புணர்வு வழங்க வேண்டும். அபராத தொகையை அதிகரிக்காமல் இருக்க வேண்டும். தினசரி கூலி வேலை செய்யும் பலரும் இதுபோன்ற சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருப்பார்கள். அவர்களின் கூலியை விட அபராதம் அதிகமாக இருந்தால் ஒரு குடும்பமே சிரமப்படும். மற்றபடி பொதுமக்களுக்கு இடையூறாக வாகனம் ஓட்டுபவர்கள், ஆபத்தான முறையில் செல்பவர்கள், ரேஸ் ஓட்டுபவர்கள் என்று தெரிந்தே தவறு செய்பவர்களுக்கு அபராதம் விதிப்பதில் தவறு இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
சாலைகள்
குமரன் நகர் பகுதியை சேர்ந்த
ஏ.ஜெயராணி கூறியதாவது:-
டாஸ்மாக் கடையை திறந்து வைத்துவிட்டு குடித்தால் அபராதம் என்பது போன்று, சாலைகளை மிகவும் மோசமாக வைத்துக்கொண்டு வாகனங்கள் விதிமுறைகளை மீறினால் அபராதம் என்று அரசு அறிவித்து உள்ளது. ஆம்புலன்சுகளுக்கு வழிவிடக்கூடாது என்று இப்போது யாரும் நினைப்பது இல்லை. அப்படி ஏதேனும் ஓரிருவர் இருந்தால் அவர்களுக்கு கண்டிப்பாக உயர்ந்த பட்ச அபராதம் மற்றும் தண்டனை வழங்கலாம். ஆனால், மிக குறுகிய சாலைகளில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், பொதுமக்கள் நடந்து செல்ல போதிய நடைபாதைகள் அமைக்காமல் ஏராளமான நகர்பகுதி ரோடுகள் உள்ளன. சாலையோரத்தில் கட்டப்படும் கடைகள் தங்கள் வாடிக்கையாளர்களின் வாகனங்கள் நிறுத்த போதிய இடம் இருக்கிறதா? என்பதை பார்க்காமல் அனுமதி வழங்கப்படுகிறது. அப்படி திறக்கப்படும் கடைகளுக்கு வரும் வாகனங்கள் சாலையில் நிறுத்தப்படுகின்றன. சில கட்டிடங்களில் தரை தளத்துக்கும் கீழ் வாகன நிறுத்தம் என்று வரைபடத்தில் காட்டி, அனுமதி பெறுகிறார்கள். ஆனால் செயல்பாட்டுக்கு வந்ததும் அந்த இடத்தையும் வாடகைக்கு விட்டுவிடுகிறார்கள். வாகனங்கள் வழக்கம்போல சாலைகளில் நிற்கிறது. அப்போது சாலையில் செல்பவர்கள் எங்கே ஒதுங்க முடியும். ஆம்புலன்ஸ் வருகிறது என்று ஓரம் சென்றால் யாரையாவது மோத வேண்டும். இல்லை என்றால் சாலையோர சாக்கடையில் விழுந்து, இவர்கள் ஆம்புலன்சில் செல்லும் நிலை வரும். எனவே சாலைகளை முழுமையாக செப்பனிட்டு வாகனங்கள் விரைவாக செல்லும் வசதியை அரசு ஏற்படுத்த வேண்டும். ஈரோடு மாநகராட்சியின் எந்த பகுதிக்கு சென்றாலும் போக்குவரத்து நெரிசல் உள்ளது. பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட தொட்டிகள் உடைந்து ஆங்காங்கே சாலைகள் அடைக்கப்பட்டு இருக்கும். இந்த சூழலில் எப்படி வாகனம் ஓட்டுவது. அபராதம் விதிப்பது தவறு இல்லை. ஆனால், முறையாக வசதிகளை அரசு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பாதிப்பு
ஈரோட்டில் மினி லாரி டிரைவர்
எஸ்.கர்ணன் கூறியதாவது:-
பாரம் ஏற்றும் லாரிகள் ஓட்டும் போது பல சிக்கல்கள் வருகிறது. பொதுவாக பார லாரிகளில் டிரைவர்கள் கூலிக்கு வேலை செய்பவர்களாகத்தான் இருப்பார்கள். எனவே வாகனத்தின் பெர்மிட், காப்பீடு, பெயர் மாற்றம் உள்ளிட்ட விவரங்கள் குறித்து தெரியாது. அதுபோன்ற நிலைகளில் அபராதம் டிரைவர்களுக்கு விதிக்கப்பட்டால் கடுமையான பாதிப்பு ஏற்படும். இதுபோல் ஒரு பார வாகனத்தில் அதிக பாரம் ஏற்றுவது பெரும்பாலும் உரிமையாளரின் ஆலோசனையின் பேரில்தான் நடக்கும். அதிக பாரத்துடன் செல்வது டிரைவர்களுக்கும் சிரமம்தான். எனவே வாகனத்தின் நிர்வாக பிரச்சினைகள் உள்ளிட்டவற்றுக்கு டிரைவர்கள் பொறுப்பு ஏற்க முடியாது. குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, அதிக வேகமாக செல்வது, ஆம்புலன்சுகளுக்கு வழிவிடாமல் செல்வது, சீட் பெல்ட் போடாமல் இருப்பது உள்ளிட்ட குற்றங்கள் டிரைவர் சார்ந்தவை. இவை குற்றங்கள்தான். இந்த தவறு செய்யாமல் இருக்க அபராதம் விதிப்பது ஏற்புடையது. ஆனால் முதல் முறை குறைந்த பட்ச அபராதமும், தொடர்ந்து ஒரே குற்றத்தை செய்தால் அபராத தொகை அதிகரிக்கவும் செய்யலாம். அன்றாட கூலிக்கு வாகனம் ஓட்டும் டிரைவர்கள் இந்த கூலியை மட்டுமே நம்பி குடும்பம் நடத்தி வருகிறார்கள் என்பதை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
காரணங்கள்
ஈரோடு ஆட்டோ டிரைவர்
சரவணன் கூறியதாவது:-
வாகன விதி முறை மீறலில் ஒருவர் ஈடுபட்டால் அது பலருக்கும் பாதிப்பு ஏற்படும். சாலையில் நடைபெறும் விதிமுறை மீறல்களுக்கு பல காரணங்கள் இருக்கும். ஆட்டோவில் ஏறி விட்டு பஸ் நிலையம், ரெயில் நிலையத்துக்கு குறிப்பிட்ட நேரத்தில் செல்ல வேண்டும் என்று பயணிகள் அவசரப்படுத்துவார்கள். ஆஸ்பத்திரிக்கு குறிப்பிட்ட நேரத்தில் செல்ல வேண்டியது இருக்கும். சில காரணங்களால், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் அவசரமாக செல்ல வேண்டியது இருக்கும். அப்படிப்பட்டநேரங்களில் ஆட்டோ டிரைவர்கள் சற்று வேகமாகவும் விரைவாகவும் செல்வது நடக்கும். எனவே சூழ்நிலைக்கு ஏற்ப நடவடிக்கை இருக்க வேண்டும். நாங்கள் பயணிகளை மட்டுமே நம்பி வாழ்க்கை நடத்துகிறோம். அவர்கள் எங்களுக்கு தெரியாதவர்களாக இருந்தாலும் அவர்களை பாதுகாப்பாக உரிய இடத்தில் சரியான நேரத்தில் சேர்ப்பது கடமையாக உள்ளது. ஒரு வேளை அப்படி விதிகள் மீறப்பட்டால் எச்சரிக்கும் வகையில் சிறிய அளவிலான அபராதம் விதித்தால் போதும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ரசீது வழங்கவேண்டும்
ஈரோட்டை சேர்ந்த வக்கீல்
யு.கண்ணன் கூறியதாவது:-
இந்த சட்டங்கள் அனைத்தும் மிகவும் அவசியமானது. அபராதம் விதிக்கும் பிரிவுகள் மிகவும் அவசியமானவை. குறிப்பாக மது குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதை தடுப்பது, தலைக்கவசம் இல்லாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டுவதை தடுப்பது. ஆம்புலன்சுக்கு வழிவிடாமல் இருப்பவர்களுக்கு அபராதம் என்று மிக முக்கிய விஷயங்கள் இருக்கின்றன. தண்டனை இருந்தால்தான் குற்றங்கள் குறையும் என்ற நோக்கத்தில் இது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், அபராத தொகை மிக மிக அதிகமாக இருக்கிறது. பாமர மக்களை பாதிக்கும் வகையிலான அபராத தொகைளை குறைப்பது பற்றி, தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும். அபராத தொகைகளை உயர்த்தும் போது அபராதம் வசூலில் ஈடுபடும் போலீசார் தவறாக நடந்து கொள்ள வாய்ப்பு உள்ளது. எனவே வாகனங்கள் அபராதத்துக்கு உட்படுத்தப்பட்டால் முறையாக ரசீது வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். அபராத தொகையை குறைக்க வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்பாவிகளுக்கு அபராதம்
இதுபற்றி போலீஸ் அதிகாரிகள் சிலரிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-
அரசு கொண்டு வரும் சட்டம், அபராதம் ஆகியவை ஏழைகளுக்கும், சமூகத்தில் அச்சப்பட்டு வாழ்பவர்களுக்கும்தான். நாங்கள் இரவு முழுவதும் வாகன சோதனையில் இருப்போம். நள்ளிரவுக்கு பிறகு கார்களில் குடிபோதையில் பலரும் வருவார்கள். அவர்களை நிறுத்தினால் அரசு பதவிகளில் இருப்பவர்கள், பணக்காரர்கள், அரசியல் பிரமுகர்களாக இருப்பார்கள். அவர்களை நிறுத்தி அபராதம் கேட்டால் உயர் அதிகாரிகளோ, உயர் பதவியில் இருப்பவர்களோ எங்களுக்கு உடனடியாக செல்போனில் பேசுவார்கள். குற்றம் செய்யும் அவர்களுக்கு அபராதம் விதிக்க முடியாது. அப்பாவிகள், போலீசை பார்த்தால் பயந்து கெஞ்சுபவர்களிடம்தான் நாங்கள் அபராதம் விதிக்க முடியும். அப்போதெல்லாம் மனம் நொந்துதான் பணி செய்ய வேண்டும். உயர் அதிகாரிகள் சாலையில் நடக்கும் பரிதாபங்களை பார்ப்பது இல்லை. இன்றைக்கு எத்தனை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று ஒரு கட்டளை மட்டும் போடுவார்கள். இலக்கை அடையவில்லை என்றால் சிரமம்தான். இப்போது புதிதாக சட்டம் போடப்பட்டு இருக்கிறது. நாங்கள் சாலையில் நின்று கொண்டு வழக்கம்போல, பெரிய மனிதர் போர்வையில் தவறு செய்பவர்களை விட்டு விட்டு, அப்பாவிகளுக்கு அபராதம் விதிப்போம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.