கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தரவரிசை பட்டியலில் 3-ம் இடம்

காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை செய்ததில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தரவரிசை பட்டியலில் 3-ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது என்று டீன் உஷா தெரிவித்துள்ளார்.

Update: 2023-07-26 19:05 GMT

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் உஷா நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதி தீவிர குறட்டையால் தூங்க முடியாமல் தென்தெரசலூர் கிராமத்தை சேர்ந்த இளையராஜா (வயது 29) என்பவர் சிரமப்பட்டு வந்தார். இதையடுத்து மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த அவருக்கு காது, மூக்கு, தொண்டை டாக்டர்கன் கணேஷ் ராஜா, வாசவி ஞானவேல் மற்றும் மயக்கவியல் டாக்டர்கள் முத்துக்குமார், சாந்தி சரண்ராஜ் ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர்கள் அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்தினர். இதேபோல் மூச்சுவிடுவதில் சிரமப்பட்டு வந்த மயிலூர் கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் என்கிற 7 வயது சிறுவனின் மூக்கை பரிசோதனை செய்தபோது, வாட்ச்க்கு பயன்படுத்தக்கூடிய 3 பேட்டரிகள் இருப்பது தெரிந்தது.

பூஞ்சைகாளான்

இதையடுத்து அறுவை சிகிச்சை மூலம் சிறுவனின் மூக்கில் இருந்த பேட்டரிகள் அகற்றப்பட்டன.

இது தவிர கீழப்பாளையம் கிராமத்தை சேர்ந்த அருண்குமார் (27) என்பவரை பரிசோதனை செய்தபோது அவரது மூக்கு வழியாக பூஞ்சை காளான் கண்ணுக்குள் சென்று பாதிப்பை ஏற்படுத்தி வந்தது தெரிந்தது. தொடர்ந்து அவருக்கு எண்டாஸ்கோப்பி மூலம் காது, மூக்கு, தொண்டை மருத்துவ குழுவினர்கள் அறுவை சிகிச்சை செய்து பூஞ்சை காளானை அகற்றி குணப்படுத்தி சாதனை படைத்தனர்.

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை குறட்டையால் பாதிக்கப்பட்ட 8 பேருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மட்டும் 3 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குறட்டைக்கு அறுவை சிகிச்சை செய்ததில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதலிடம் பிடித்துள்ளது. இந்த மருத்துவமனையில் நடப்பாண்டில் 386 பேருக்கு காது, மூக்கு, தொண்டை சிறப்பு அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளது.

3-ம் இடம்

இதன் மூலம் தமிழக அளவில் தரவரிசை பட்டியலில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை 3-ம் இடம் பிடித்துள்ளது. அதேபோல் தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 11 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் மருத்துவக்குழுவினர் ஆய்வு செய்ததில் பிரசவத்திற்கு சிகிச்சை அளிப்பதில் முதல் தரவரிசை பட்டியலில் இந்த மருத்துவமனை உள்ளதாக சுகாதாரத் துறை செயலாளர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். பேட்டியின் போது மருத்துவமனை கண்காணிப்பாளர் நேரு, மருத்துவ நிலைய அலுவலர் பழமலை, கல்லூரி துணை முதல்வர் ஷமீம், காது, மூக்கு, தொண்டை டாக்டர் கணேஷ் ராஜா மற்றும் டாக்டர்கள், துறை தலைவர்கள் உடன் இருந்தனர். இதையடுத்து குணமடைந்த இளையராஜா, அருண்குமார், ராஜேஷ் ஆகியோரை மருத்துவக்குழுவினர் வாழ்த்தி அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்